நமது எம்.பி. என்ன செய்ய வேண்டும் 

கோவையில் நிலவும் வறட்சி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், நதி நீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

கோவையில் நிலவும் வறட்சி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், நதி நீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டாலே விவசாயிகளின் பல பிரச்னைகள் தீர்ந்துவிடும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் பயறு வகைப் பயிர்கள், காய்கறி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. எனவே அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அந்தத் தொழிலாளர்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கான கூலியை அரசும் விவசாயிகளும் பகிர்ந்து கொள்ளும்படி திட்டம் வகுக்க வேண்டும். 
விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டங்களை அனைத்து பயிர்களுக்கும் முறையாக செயல்படுத்த வேண்டும். அகால மரணமடையும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கள் மீதான தடையை நீக்க குரல் கொடுக்க வேண்டும்.

என்.கே.டி.பொன்னுசாமி தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்

கோவை மாவட்ட விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் நொய்யல், பவானி, கெளசிகா நதிகளை இணைத்து, நீர் ஆதாரங்களைப் பெருக்க முயற்சிக்க வேண்டும். நதிகளை இணைப்பதற்கு குரல் கொடுப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். 
நலிவுற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க திட்டங்கள் வேண்டும். விளை நிலங்களை பாழ்படுத்தும் கெயில், உயர் அழுத்த மின் கோபுரம் போன்ற திட்டங்களை சாலைகளின் வழியாக செயல்படுத்த வேண்டும்.  
வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். கோவையை மையமாகக் கொண்டு தென்னை வாரியம் அமைக்க குரல் கொடுப்பவராக இருக்க வேண்டும்.

சு.பழனிசாமி, தலைவர்  தமிழக விவசாயிகள் சங்கம்

விவசாய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில்தான் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு, திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் கடந்த காலங்களில் ஆட்சி செய்த காங்கிரஸும், தற்போது ஆட்சி செய்யும் பாஜகவும் வேளாண் பொருளாதாரக் கொள்கையை மாற்றவே இல்லை. விவசாயம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படவில்லை. இதைச் செய்யாததால்தான் அரசுகளின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது செலவுதான் இரட்டிப்பாகிறது.
 அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்பவருக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை நிர்ணயிக்க வேண்டும். அதேநேரம் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் வேளாண் பொருளாதாரக் கொள்கையை மாற்றி அமைக்காமல், எந்த வாக்குறுதி கொடுத்தாலும் அது விவசாயிகளுக்கு பயனளிக்கப் போவதில்லை. எனவே மூலப்பிரச்னைக்கு முடிவு காண்பதற்கு முயற்சிப்பவரே பதவிக்கு வர வேண்டும்.

பி.கந்தசாமி, பொதுச் செயலர், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com