வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடிச் சீட்டுகள் விநியோகம்

கோவை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 23 ஆயிரம் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்குச்

கோவை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 23 ஆயிரம் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடிச் சீட்டுகள் (பூத் சிலிப்கள) விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கோவை மாவட்டத்தில் அண்மையில் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலுடன் சேர்த்து 29 லட்சத்து 5 ஆயிரத்து 114 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்களின் பெயர், முகவரி மற்றும் வாக்குப் பதிவு மையத்தின் முகவரி அடங்கிய வாக்குச் சாவடிச் சீட்டுகள் (பூத் சிலிப்கள்) வாக்காளர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் வாக்குச் சாவடி மையங்களை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளலாம். 
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இம்முறை புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடிச் சீட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்க புகைப்படத்துடன் கூடிய  29 லட்சத்து 2 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 
கடந்த சில நாள்களாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடிச் சீட்டுகளை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 
இதுவரை மாவட்டத்தில் 12 லட்சத்து 23 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கு.ராசாமணிக்கு, ரேஸ்கோர்ஸ் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆனந்தி திங்கள்கிழமை வாக்குச் சாவடிச் சீட்டை வழங்கினார். 
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: 
வாக்காளர்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடிச் சீட்டுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றன. 
வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கையொப்பத்துடன் வாக்காளர் அல்லது அவரது குடும்பத்தில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்த உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 12 லட்சத்து 23 ஆயிரம் வாக்களர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வாக்காளர்களுக்கும் இரண்டு நாள்களில் வழங்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com