சுடச்சுட

  

  நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த மாணவர்கள்

  By DIN  |   Published on : 17th April 2019 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருவர் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளனர்.
  கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த பெ.சக்திவேல் - எஸ்.அனிதா தம்பதியரின் மகன் எஸ்.ஏ.தர்ஷன் (8). கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரும் இவர் தனது தந்தையின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய முடிவு செய்தார். 
  இதையடுத்து கடந்த வாரம் வீட்டின் ஒரு அறையில் அமர்ந்து விழிப்புணர்வு ஓவியங்களை வரையத் தொடங்கிய தர்ஷன், 7 நாள்களில் 1,050 ஓவியங்களை வரைந்தார். 
  இந்த ஓவியங்களில், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்களையும் அவர் எழுதியுள்ளார். இதையடுத்து அந்த ஓவியங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை திங்கள்கிழமை சந்தித்த தர்ஷன் அவரிடம் வாழ்த்துப் பெற்றார். 
  அதேபோல், கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் கு.விக்னேஷ் கண்ணா என்ற மாணவர், தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அதை கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காட்சிப்படுத்தினார்.
  அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குகளை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஜனநாயகத்தின் ஆணிவேராகத் திகழும் தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 12 ஓவியங்கள் வரைந்துள்ள விக்னேஷ் கண்ணா, துறைத் தலைவர் பி.கனகராஜின் உதவியுடன் அதை கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.
  இந்த ஓவியங்களை கல்லூரி முதல்வர் சித்ரா, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பார்த்து ரசித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai