என்ன செய்ய வேண்டும் நமது எம்.பி.?

மத்திய, மாநில அரசுகளின் ஏற்றுமதி வரிகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக துணி வகைகள்,

மத்திய, மாநில அரசுகளின் ஏற்றுமதி வரிகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக துணி வகைகள், ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்பவர்களுக்கு வரிகள் திரும்பக் கிடைக்கின்றன. அதேநேரம் நூல்களுக்கு வழங்கப்பட்டு வந்த 6 சதவீத ஏற்றுமதி சலுகை தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. நாட்டில் உள்ள மொத்த நூற்பாலைகளில் 45 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ள நிலையில், தற்போது அவர்கள் நஷ்டத்தில் ஆலைகளை இயக்கி வருகின்றனர். எனவே, ஏற்றுமதி வரிகளை திரும்பப் பெறும் திட்டத்தில் துணி நூலையும் சேர்க்க வேண்டும். தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சுமார் ரூ.9 ஆயிரம் கோடியில், ரூ.4 ஆயிரம் கோடி தமிழகத்துக்கே வர வேண்டியுள்ளது. அதை உடனடியாக வழங்கினால் ஆலைகளை மேம்படுத்த முடியும். அதேபோல், பருத்தி விலை உயர்வைத் தடுப்பதற்கானத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்.
பி.நடராஜ்,
தலைவர், சைமா.

பஞ்சாலைகளில் இருந்து வெளியேறும் தரமான கழிவுப் பஞ்சு (கோம்பர்) மூலமாகவே ஜீன்ஸ் பேண்ட், சட்டைகள், காடா துணி, படுக்கை விரிப்பு, துண்டு, நைட்டிகள், கைப்பைகள் உள்ளிட்ட பல்வேறு ஆடைகள், வீட்டு உபயோக துணி வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், மூலப் பொருளான கழிப் பஞ்சின் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சு விலையில் 45 சதவீதம் வரை மட்டுமே கழிவுப் பஞ்சின் விலை இருந்து வந்தது. ஆனால், தற்போது 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதனால் 400 க்கும் மேற்பட்ட ஒபன் எண்ட் மில்களும், அவர்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான விசைத்தறித் தொழிலாளர்களும் கவலையில் உள்ளனர். ஏற்றுமதியாகும் கழிவுப் பஞ்சுக்கு வரி விதிப்பதன் மூலம் உள்ளூரில் குறைவான விலையில் பஞ்சு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதை வலியுறுத்துபவராக எம்.பி. இருக்க வேண்டும்.
ஜி.அருள்மொழி,
பொதுச் செயலர், ஓஸ்மா


கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் விசைத்தறி மார்க்கெட்டிங் சென்டர் அமைக்க வேண்டும் என்பதே எங்களது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. மேலும், விசைத்தறியாளர்களைப் பாதுகாக்க ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.3.50 க்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. அப்படி இருந்தும் எங்களது வருவாயில்  மூன்றில் ஒரு பகுதி மின்சார கட்டணத்துக்கே சென்றுவிடுகிறது. எனவே எங்களுக்கு இலவச மின்சாரமே தீர்வு. அதற்காகத்தான் சூரியசக்தி மின் மோட்டாரை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தோம். இதையடுத்து, நாடு முழுவதிலும் 50 சதவீத மானிய விலையில் சூரியசக்தி சாதனங்களை வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. மாநில அரசும் அதேபோல் எங்களுக்கு 25 சதவீத மானியம் வழங்கினால் அனைவரும் சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தத் தொடங்குவோம். இதனால் அரசுக்கும் செலவு மிச்சமாகும், விசைத்தறித் தொழிலும் பாதுகாக்கப்படும். அதேபோல், ஜாப் ஒர்க் செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஒப்பந்தக் கூலி சரிவர கிடைப்பதில்லை இதற்கு பாடுபடுபவராக இருக்க வேண்டும்.
பி.குமாரசாமி,
செயலர், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com