தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் கர்ப்பிணியும், சிசுவும் பலி: உறவினர்கள் குற்றச்சாட்டு

தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் கர்ப்பிணி, சிசுவும் இறந்ததாக உறவினர்கள்

தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் கர்ப்பிணி, சிசுவும் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(38). பந்தல் அலங்கார வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா (35). கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிர்மலா பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ஏப்ரல் 15 ஆம் தேதி நிர்மலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால், பதற்றமடைந்த நிர்மலா இதுகுறித்து தன்னுடன் கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் திலகவதியிடம் ஆலோசனைக் கேட்டுள்ளார். பின்னர், அவரின் பரிந்துரையின்பேரில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 15 ஆம் தேதி சிகிச்சைக்காக நிர்மலா அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் ஸ்கேன் பரிசோதனையில் குழந்தை வயிற்றுக்குள்ளே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, மறுநாள் காலையில் இறந்த குழந்தையை வெளியே எடுத்துவிடலாம் என்றும் சுரேஷிடம், மருத்துவர் திலகவதி கூறியுள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் நிர்மலாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்போது மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனை செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மருத்துவர் திலகவதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளார். அதன்பின்னர் நிர்மலாவின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
மேலும், உடல்நிலை மோசமடைந்ததால் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு திலகவதி கூறியுள்ளார். ஆனால், அங்கு அழைத்துச் சென்றபோது நிர்மலாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் கோவை அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் நிர்மலா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதில் மருத்துவர் திலகவதியின் அலட்சியத்தால்தான் மனைவி உயிரிழந்ததாக கணவர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் நிர்மலா இறந்த தகவலறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பிரேதப் பரிசோதனை செய்யாமல் நிர்மலாவின் உடலை வாங்க மாட்டோம் எனத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர்,  நிர்மலாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com