தொடர் விடுமுறை எதிரொலி: வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஏப்ரல் 20, 21 இல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன

தொடர் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மேலும், சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு வசதியாக ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நூற்பாலை, விசைத்தறி, பம்ப் செட், வெட் கிரைண்டர் நிறுவனங்கள், உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், நாகர்கோயில் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தவிர ஒடிஸா, பிகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட  வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என 2 லட்சத்துக்கும் அதிகமானோர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாள்களில் இவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
தற்போது, தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெறும் தேர்தலையொட்டி, கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏராளமானோர் வாக்களிக்க செவ்வாய்க்கிழமை முதலே தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தேர்தலையொட்டி கல்லூரிகளுக்கு ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதன் காரணமாக கோவை ரயில் நிலையம், காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் கடந்த இரணடு நாள்களாக வழக்கத்தை விட ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டன. பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பில், ஏப்ரல் 16 மற்றும் 17 தேதிகளில் சிங்காநல்லூரில் இருந்து மதுரை, திருச்சி, தேனி, தஞ்சாவூர் பகுதிகளுக்கு 360 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம், திருவண்ணாமலை மார்க்கமாக 100 பேருந்துகளும், திருப்பூர் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் இருந்து சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 200 பேருந்துகளும், ஈரோடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 120 பேருந்துகளும், கோவையில் இருந்து உதகை செல்ல கூடுதலாக 40 பேருந்துகளும்  இயக்கப்பட்டன.
இதேபோல, சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு வசதியாக ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக  அரசுப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com