கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்தாத தமிழக அரசு: மதிமுக மாநில இளைஞரணி செயலர் கண்டனம்
By DIN | Published On : 21st April 2019 04:15 AM | Last Updated : 21st April 2019 04:15 AM | அ+அ அ- |

தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசுக்கு மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு உயர் கல்வித் துறை முதன்மைச் செயலராக இருந்த சுனில் பாலிவாலை நேரில் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்திருந்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி உயர் கல்வித் துறை அமைச்சருக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தோம். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி பல கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் ஒற்றைச்சாளர முறை குறித்து அமைச்சருக்கு கடந்த ஆண்டு அனுப்பிய கடிதத்துக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
கல்வித் துறையில் உள்ள குளறுபடிகளை தாமே கண்டறிந்து அதைக் களைந்து, துறையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துபவர்களே நல்ல அமைச்சர்களாக இருக்க முடியும். ஆனால், குறைகளை மக்களே குறிப்பிட்டுச் சொல்லியும், கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் சிறப்பாக நடைபெறும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த பரிசீலிக்கும்படி கேட்டுக் கொண்ட பிறகும், அதில் எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
தமிழகத்தில் 750க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் சேர உள்ளனர். இந்த அதிகபட்ச எண்ணிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு கல்லூரி நிர்வாகங்கள் அதிக விலைக்கு விண்ணப்பங்களை விற்பனை செய்வது, கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் பெற்றோரிடம் தனி அறையில் மட்டுமே தெரிவிப்பது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளும்போது வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது என்பது போன்ற பல விதிமீறல்கள் நடைபெறுகின்றன.
எனவே, மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டும் முறைப்படுத்தாத உயர் கல்வித் துறை அமைச்சரை கண்டிக்கிறோம். வரும் ஆண்டிலாவது ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.