சூலூர் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

சூலூர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப்ரல் 22) தொடங்குகிறது. தேர்தல் அலுவலராக உதவி ஆணையர் (நகர்ப்புற நிலவரி) ச.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 


சூலூர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப்ரல் 22) தொடங்குகிறது. தேர்தல் அலுவலராக உதவி ஆணையர் (நகர்ப்புற நிலவரி) ச.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 
கோவை மாவட்டம், சூலூர் சட்டப் பேரவை உறுப்பினராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த கனகராஜ் (64) இருந்தார். இவர் கடந்த மார்ச் 21 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சூலூர் சட்டப் பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சூலூர் தொகுதியுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்குவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட  ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சூலூர் சட்டப் பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுக்களை சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஏப்ரல் 22) முதல் வழங்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 
வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 30 ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை மே 2 ஆம் தேதிக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இத்தொகுதிக்கான வாக்குப் பதிவு மே 19 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதியும் நடக்கின்றன.
சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக உதவி ஆணையர் (நகர்ப்புற வரி) ச.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் உதவி அலுவலராக சூலூர் வட்டாட்சியர் ஆ.ஜெயராஜ் மற்றும் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெ.மீனாகுமாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
வேட்பு மனுக்கள் ஏப்ரல் 22 முதல் 29ஆம் தேதி வரை சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com