கோடை மழையால் மாறியது கோவையின் பருவநிலை: சிறுவாணி பகுதியில் 4 நாள்களில் 134 மி.மீ. மழை பதிவு
By DIN | Published On : 23rd April 2019 07:38 AM | Last Updated : 23rd April 2019 07:38 AM | அ+அ அ- |

கோவை சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் கடந்த 4 நாள்களில் 134 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கோடை மழையால் பருவநிலை மாறியுள்ளது.
கோவை மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மார்ச், ஏப்ரலில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து சில நாள்கள் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானது.
கோடை வெப்பம் காரணமாக கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர் இருப்பும் குறையத் தொடங்கியது. இதனால், கோடைக் காலத்தில் கோவை நகரின் குடிநீர்த் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.
இந்நிலையில், கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நகரில் மட்டும் இல்லாமல் சிறுவாணி அணை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்தது.
இந்நிலையில், கோடையின் வறட்சியால் நீர் இருப்பு குறைந்து வந்த நிலையில் கோடை மழையால் சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், கடந்த இரண்டு மாத காலமாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கோவை மக்களுக்கு கோடை மழை குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வறட்சியால் வாடிக் கிடந்த பயிர்களும் கோடை மழையால் உயிரூட்டப்பட்டுள்ளன.
கடந்த 4 நாள்களில் சிறுவாணி மற்றும் அடிவாரப் பகுதியில் மொத்தம் 134 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை மாநகராட்சியின் குடிநீர்த் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து தினமும் 6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலையும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் மட்டுமின்றி மலையடிவாரங்களில் உள்ள குளங்கள் உள்பட நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.