பஞ்சு விலை ரூ.48,200 ஆக உயர்ந்தது: உற்பத்தியைக் குறைக்கும் நூற்பாலைகள்
By DIN | Published On : 23rd April 2019 07:39 AM | Last Updated : 23rd April 2019 07:39 AM | அ+அ அ- |

நாட்டில் கடந்த சில வாரங்களாக பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது ஒரு கண்டி (356 கிலோ) ரூ.48,200 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சு விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில் இழப்பைத் தவிர்ப்பதற்காக நூற்பாலைகள் உற்பத்திக் குறைப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் பருத்தி ஆண்டாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. நாட்டில் உள்ள பஞ்சாலைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.75 கோடி பேல்கள் பஞ்சு தேவைப்படுகிறது.
தமிழகத்துக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி பேலுக்கும் மேல் பஞ்சு தேவைப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் சுமார் 6 லட்சம் பேல்கள் பஞ்சு மட்டுமே உற்பத்தியாகின்றன. இதனால் தமிழகத்துக்கு தேவைப்படும் பஞ்சில் சுமார் 90 சதவீதம் மகாராஷ்டிரம், தெலங்கானா, குஜராத், கர்நாடக மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த பருத்தி ஆண்டில் ஒரு கண்டி பஞ்சின் (356 கிலோ) விலை ரூ.38,500 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பருத்தி சீசனில், புதிதாக அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக் கொள்கையின்படி ஒரு கண்டி ரூ.45 ஆயிரத்தில் இருந்து தொடங்கியது.
இந்த விலை அக்டோபர் கடைசியில் ரூ.47,500 ஆக உயர்ந்த நிலையில், பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறையத் தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.42,500 வரை விற்பனையானது. இந்த நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த பஞ்சு விலை, தற்போது ஒரு கண்டி ரூ.48,200 ஆக உயர்ந்துள்ளது.
குறுகிய காலத்தில் மட்டும் 13 சதவீதம் பஞ்சு விலை உயர்ந்திருப்பதாகவும், இதனால் நூற்பாலைகள் 30 சதவீதம் வரை உற்பத்திக் குறைப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, கடந்த மார்ச் முதல் வாரத்தில் ரூ.42,700 ஆக இருந்த பஞ்சு விலை, கடந்த 45 நாள்களில் ஒரு கண்டிக்கு ரூ.5,500 வரை அதாவது 13 சதவீதம் உயர்ந்துள்ளது. போக்குவரத்து செலவையும் சேர்த்தால் ஒரு கண்டி பஞ்சு விலை ரூ.49,700 ஆகிறது.
இந்த விலை உயர்வு மே மாதத்தில் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பஞ்சு விலை உயர்வு தொடர்பாக 193 நூற்பாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 43 சதவீத ஆலைகள் 10 முதல் 30 சதவீதம் வரை உற்பத்தியைக் குறைத்துள்ளன. 22 சதவீத ஆலைகள் 5 முதல் 10 சதவீதம் வரை உற்பத்தியைக் குறைத்துள்ளன.
பஞ்சு விலை உயர்வால் நூலின் விலையும், அதைத் தொடர்ந்து துணியின் விலையும் உயரும் வாய்ப்பு இருப்பதால் ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் உள்ள உற்பத்தியாளர்கள், பஞ்சு வர்த்தகத்தின் நிலையையும், விலையின் போக்கையும் உணர்ந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் விலை உயர்வை எதிர்கொள்ள முடியும் என்றார்.