கோவையில் 34 ஆவது அரசுப் பொருட்காட்சி: ஆட்சியர் தொடங்கிவைத்தார்
By DIN | Published On : 26th April 2019 07:16 AM | Last Updated : 26th April 2019 07:16 AM | அ+அ அ- |

செய்தித் துறை சார்பில் 34 ஆவது அரசுப் பொருட்காட்சி கோவை மத்திய சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ.சங்கர் ஆகியோர் பொருட்காட்சியை திறந்துவைத்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் த.ராமதுரை முருகன், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத், மாநகர துணை ஆணையர் பாலாஜிசரவணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, வேளாண் துறை, இந்துசமய அறநிலையத் துறை, சமூக நலத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வனத் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப் பணித் துறை உள்பட 27 துறைகள் மற்றும் அரசு சார்பு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரங்குகளில் துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
குழந்தைகளைக் குதூகலப்படுத்த ராட்டினம் உள்பட பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொருட்காட்சி 45 நாள்கள் நடைபெறுகிறது. தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மக்கள் பொருட்காட்சியை பார்வையிடலாம்.
பொருட்காட்சிக்கு பொது மக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.