தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல்: மீன்களின் விலை கடும் உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ. 1500
By DIN | Published On : 26th April 2019 07:16 AM | Last Updated : 26th April 2019 07:16 AM | அ+அ அ- |

கடல்களில் மீன் பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மீன்களின் வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கோவை, உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து தினமும் சராசரியாக 15 முதல் 20 டன் மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இவை, கோவை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தமாகவும், மார்க்கெட்டில் சில்லறையாகவும் விற்கப்படுகின்றன. பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து கோடை வெயில் வாட்டுவதால் நுகர்வோர் இடையே கோழி இறைச்சியின் நுகர்வு குறைந்து மீன் இறைச்சி நுகர்வு அதிகரித்தது.
உக்கடம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 டன் மீன்களும், மற்ற தினங்களில் 5 டன் மீன்களும் விற்பனையாகின. இந்நிலையில், மீன்களின் இனப் பெருக்கத்துக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ஒருமுறை அறிவிக்கும் மீன்பிடி தடை உத்தரவு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடையானது ஜூன் 20 ஆம் தேதி வரை 60 நாள்களுக்கு நீடிக்கும்.
இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள கடல்களில் மீன் பிடிக்க மீனவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து விற்பனைக்காக அனுப்பப்படும் கடல் மீன்களின் வரத்து பாதியாகக் குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் 17 டன் மீன்கள் விற்பனைக்கு வந்த கோவை மீன் மார்க்கெட்டுக்கு, கடந்த 2 நாள்களாக 5 முதல் 7 டன் மீன்களே கொண்டு வரப்படுகின்றன. இதனால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் கிலோ ரூ. 900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.1500-க்கு விற்றது. ரூ. 500-க்கு விற்ற கருப்பு வாவல் ரூ.800- க்கும், ரூ.900-க்கு விற்ற வெள்ளை வாவல் ரூ.1,200-க்கும், ரூ.300-க்கு விற்ற பாறை மீன், ரூ.500-க்கும் விற்பனையானது. இதேபோல், விலாங்கு மீன் கிலோ ரூ.1,000, மத்தி ரூ, 200, சங்கரா ரூ.350, அயிலை ரூ.300, செம்மீன் ரூ.500-க்கு விலை அதிகரித்து விற்பனையானது.