சூலூர் இடைத்தேர்தல்: ஒரே நாளில் 11 பேர் வேட்புமனு தாக்கல்

சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஒரே நாளில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்

சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஒரே நாளில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சூலூர் சட்டப் பேரவைத் இடைத்தேர்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை பகல் 12 மணி வரையில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் 12 மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்தது. இதற்கு 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம் என்பதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். 
இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.பாலகிருஷ்ணனிடம் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு உடனிருந்தார். 
இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த விஜயராகவன் (34) வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர்கள் இருவரைத் தவிர சுயேச்சை வேட்பாளர்களாக ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (30),
இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை கள்ளப்பாளையத்தைச் சேர்ந்த பொன்கார்த்திகேயன் (47), உடுமலையைச் சேர்ந்த உமர் அலி (52), அகில இந்திய நாடார் மக்கள் பேரவை சார்பில் சரவணம்பட்டியைச் சேர்ந்த சிவலிங்கம் (35), அனைத்து மக்கள் புரட்சி கட்சி சார்பில் சென்னை பாடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (59), உழைப்பாளர் மக்கள் கட்சி சார்பில் கோவில்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் (54), தமிழக மக்கள் ஒற்றுமைக் கழகம் சார்பில் கோவை மதுக்கரை அரிசிபாளையத்தைச் சேர்ந்த சின்னராஜ் (68), அநீதிக்கு எதிரான 
மக்கள் இயக்கம் சார்பில் கருமத்தம்பட்டி இலச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் (31), திமுக மாற்று வேட்பாளராக கோவை வதம்பச்சேரியைச் சேர்ந்த வேலுசாமி (66) ஆகிய 11 பேர் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்துக்கு அதிக அளவிலான திமுகவினரை போலீஸார் அனுமதித்ததாகவும், தங்களது கட்சியினருக்கு கட்டுப்பாடுகளை விதித்து தொண்டர்களை அனுமதிக்க மறுப்பதாகவும் கூறி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், வேட்புமனு தாக்கல் செய்யும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com