முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வீட்டுக்கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.45 லட்சம் மோசடி: ஒருவர் கைது
By DIN | Published On : 04th August 2019 09:21 AM | Last Updated : 04th August 2019 09:21 AM | அ+அ அ- |

கோவையில் வங்கியில் வீட்டுக்கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம், சேரன் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் கோவை மாநகரக் குற்றப்பிரிவில் அண்மையில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
நான் வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் வாங்க முயற்சித்தபோது உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் எனக்குப் பழக்கமானார். இவர் மூலமாக நஞ்சப்பன், செல்வக்குமார் ஆகிய 2 பேரிடம் வங்கிக்கடன் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டேன். இதைத் தொடர்ந்து, நஞ்சப்பன், செல்வக்குமார் இருவரும் சூலூரில் உள்ள அவர்களது அலுவலகத்துக்கு என்னை வரவழைத்து, என் கையெழுத்துள்ள தொகை நிரப்பப்படாத காசோலை, ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு, அரசு வங்கி ஒன்றில் வீட்டுக்கடன் பெற்றுத் தருவதாகக் கூறினர்.
ஆனால் நான் கொடுத்த காசோலையைப் பயன்படுத்தி, எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.42 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை நஞ்சப்பன், செல்வக்குமார் இருவரும் தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தனர்.
இதேபோல மேலும் 8 பேரிடம் ரூ.2 கோடி வரை இவர்கள் இருவரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின்பேரில் துணை ஆûணையர் பெருமாள் மேற்பார்வையில் உதவி ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் காவல் ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர்கள் ஜமுனா, ரேணுகாதேவி ஆகியோர் அடங்கிய போலீஸார் இவ்வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணனை கைது செய்தனர். வேறு ஒரு மோசடி வழக்கில் கடந்த சில நாள்களுக்கு முன்பு செல்வக்குமார் கைதாகி சிறையில் உள்ளார். நஞ்சப்பனைப் போலீஸார் தேடி வருகின்றனர்.