விளம்பரப் பெட்டிகளாக மாறிய மின் இணைப்புப் பெட்டிகள்
By DIN | Published On : 04th August 2019 09:28 AM | Last Updated : 04th August 2019 09:28 AM | அ+அ அ- |

கோவை மாநகர சாலைகளில் மின்வாரியம் அமைத்துள்ள மின் இணைப்புப் பெட்டிகள் இலவச விளம்பரப் பெட்டிகளாக மாறியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கோவையில் துணை மின் நிலையங்களில் இருந்து வரும் மின்சார புதைவடக் கேபிள்களுக்காக சாலையோரங்களில் ஒருங்கிணைப்புப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஓரங்களில் சுமார் 100 மீட்டருக்கு ஒரு மின் பெட்டி வீதம் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இந்த பெட்டிகள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் திறந்து மூடும் வகையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தற்போது அந்த மின் இணைப்புப் பெட்டிகள் அனைத்தும் விளம்பரப் பெட்டிகளாக மாறியுள்ளன. இவற்றில் விளம்பர நோட்டீஸ் ஒட்டக்கூடாது என எச்சரிக்கப்பட்டிருந்தாலும், தனியார் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள், அரசியல் கட்சிகள், தனி நபர்களின் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பல பெட்டிகளைத் திறக்க முடியாத நிலை ஏற்படுவதாக மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கோவையைச் சேர்ந்த கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் நா.லோகு கூறும்போது, மாநகரில் இதுபோன்று நூற்றுக்கணக்கான விளம்பரப் பெட்டிகளை மின்சார வாரியம் அமைத்துள்ளது. இவற்றில் நாள்தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட விளம்பரங்கள் ஒட்டப்படுகின்றன.
பல பெட்டிகளில் அதன் எண்கள் தெரியாத அளவுக்கு முழுவதுமாக விளம்பரங்கள் மூடியிருப்பதால், பழுதை சரி செய்ய வரும் ஊழியர்கள் திணறும் நிலை உருவாகிறது. இது தொடர்பாக தலைமைப் பொறியாளரிடம் ஏற்கெனவே நாங்கள் புகார் மனு அளித்திருக்கிறோம். மின் இணைப்புப் பெட்டிகளில் விளம்பர நோட்டீஸ் ஒட்டுவோர் மீது மின்சார வாரியமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.