பரளிக்காடு சூழல் சுற்றுலா இரு நாள்களுக்கு ரத்து
By DIN | Published On : 09th August 2019 08:47 AM | Last Updated : 09th August 2019 08:47 AM | அ+அ அ- |

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைப் பகுதியில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் தொடர் மழை காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காரமடை வனச்சரக அலுவலர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள கேரளம் மற்றும் நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் கடந்த 5 நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் பரளிக்காடு பகுதியில் உள்ள சூழல் சுற்றுலா மையம் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10, 11) ஆகிய இரு நாள்களுக்கு மூடப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் சூழல் சுற்றுலாவுக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய அணுகத் தேவையில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.