கனமழை எதிரொலி: வெள்ளலூர் குளம் 2 ஆவது முறையாக நிரம்பியது: விவசாயிகள், தன்னார்வலர்கள் மலர்தூவி வரவேற்பு

கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கன மழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு

கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கன மழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளலூர் குளம் இரண்டாவது முறையாக திங்கள்கிழமை நிரம்பியது. பொதுமக்கள், விவசாயிகள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மலர்தூவி வரவேற்றனர்.
கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றை ஆதாரமாகக் கொண்டு 25க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் வெள்ளலூர் குளம் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் குளம் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இதில் 15 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கிவைக்க முடியும். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் குளத்துக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், அடைக்கப்பட்டும், புதர்செடிகள் முளைத்து பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது.
இதனால், குளத்துக்கு தண்ணீர் வரத்து தடைபட்டு 15 ஆண்டுகளாக பருவ மழைக் காலங்களில் கூட தண்ணீர் இல்லாமல் குளம் வறண்டு காட்சியளித்தது. இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளத்தின் நீர்வரத்து வாய்க்கால்களில் இருந்த அடைப்புகள், ஆக்கிரமிப்புகளை கடந்த ஆண்டு அகற்றினர்.
தவிர வாய்க்கால் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இதன் பயனாக கடந்த ஆண்டும் தென்மேற்குப் பருவ மழை காலத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு குளம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. நீண்ட காலத்துக்குப் பின் வெள்ளலூர் குளம் நிரம்பியதால் பொதுமக்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். 
இதில், நடப்பு ஆண்டில் கோடை மழை ஏமாற்றியதால் இரண்டு மாதங்களுக்கு முன் குளத்தில் தணணீர் இருப்பு குறைந்தது. இந்நிலையில், கடந்த வாரம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திருப்பிவிடப்பட்டது.
ஏற்கெனவே உக்குளம், புதுக்குளம், கோளராம்பதி ஆகிய குளங்கள் நிரம்பிய நிலையில் வெள்ளலூர் குளம் தனது முழு கொள்ளளவை திங்கள்கிழமை எட்டியது. இதனை வெள்ளலூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மலர்தூவி வரவேற்றனர். இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரா.மணிகண்டன் கூறியதாவது:
வெள்ளலூர் குளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆவது முறையாக நிரம்பியுள்ளது. பருவ மழைக்கு முன் பொதுப் பணித் துறை சார்பில் வெள்ளலூர் குளம் உள்பட அனைத்து குளங்களின் நீர்வரத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு, அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் கடந்த ஆண்டு 30 நாள்களில் நிரம்பிய வெள்ளலூர் குளம், நடப்பு ஆண்டில் ஒரே வாரத்தில் நிரம்பியது. குறிச்சி குளம் வாய்க்காலும் சீரமைக்கப்பட்டுள்ளதால் அந்தக் குளமும் வேகமாக நிரம்பி வருகிறது.
இதேபோல், ஆண்டுதோறும் பருவ மழைக்கு முன் நீர்வரத்து வாய்க்கால்களை பொதுப் பணித் துறை சார்பில் சீரமைக்கப்பட்டால் மழைநீர் வீணாகாமல் குளங்களில் தேக்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com