நீலகிரியில் கனமழை: சேத மதிப்பீடு தெரிந்தவுடன் மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பீடு குறித்து தெரிந்தவுடன் மத்திய

கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பீடு குறித்து தெரிந்தவுடன் மத்திய அரசிடம் நிதி கோருவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டெல்டா பாசன விவசாயிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும், நிலச் சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீலகிரிக்குச் செல்கிறார்.
கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பு அணையில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்படாமல் இருப்பதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லுமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தவறான கருத்து. கொள்ளிடம் ஆற்றில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 70 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்ணீர் வீணாகாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்ட மறுநாளே வருவாய்த் துறை அமைச்சர் சென்று துரிதமாக நிவாரணப் பணிகள் மேற்கொண்டு வருகிறார். 
ஆனால், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேடுவதற்காக ஒருநாள் பயணமாகச் சென்றுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு  முழுமையான நிவாரணம் வழங்கும்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கி தேவையான வசதிகள் செய்து தரப்படும். சேத மதிப்பீடு குறித்து தெரிந்த பின்னர் அதற்கேற்றவாறு மத்திய அரசிடம் நிதி கோர முடியும். துணை முதல்வர் பார்வையிட்ட பின்னர் சேத மதிப்பீடு குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் திமுக கூட்டணி எந்த நல்லதும் செய்ததில்லை. ஆனால், நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதற்கு மாநில அரசு துணை நிற்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை அரசு செய்தது. ஆனால், ஸ்டாலின் நாடகம் நடத்தி பத்திரிகைகளில் பேட்டியளிப்பார், அதோடு அவரது பணி முடிந்து விடும் என்றார்.
இப் பேட்டியின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com