குளத்துக்கு தண்ணீர் வரும் பாதை: ஆட்சியரிடம் எம்.பி.க்கள் புகார்

நொய்யல் ஆற்றில் இருந்து செங்குளத்துக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி

நொய்யல் ஆற்றில் இருந்து செங்குளத்துக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவை உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். 
கோவை, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சண்முகசுந்தரம் ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த வாரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்முலம் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், செங்குளத்துக்கு தண்ணீர் செல்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியினர் மண்ணைக் கொட்டி வருகின்றனர். இதனால், செங்குளத்துக்கு தண்ணீர் வருவது தடுக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் நாள்களில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே குளத்துக்கு தண்ணீர் வருவதை தடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: 
கோவையில் போதுமான மழைப்பொழிவு கிடைத்தும் குளங்களுக்கு தண்ணீர் கொண்டுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 
இதில் ஆட்சியர் தலையிட்ட உடனடி நவடிக்கை எடுக்க வேண்டும். தவிர மழையால் ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன.
அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நூற்றாண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை அரசு நிர்வாகம் வெளியேற்றியுள்ளது. இவர்களுக்கு, வழங்கப்படும் மாற்று குடியிருப்புகள் நகரப் பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்கடம் அருகில் உள்ள இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை துறை மாற்றி அங்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com