சுடச்சுட

  

  சாக்கடைக் கழிவுகளை அகற்றும் பணியில் "ரோபோ'க்கள்: மாநகராட்சி ஆணையர் பேட்டி

  By DIN  |   Published on : 15th August 2019 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாநகரில் சாக்கடைக் கழிவுகளை அகற்ற "ரோபோ"க்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் தெரிவித்தார்.  
  இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் கூறியதாவது:
  கோவை மாநகரில் தினமும் 850 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் மக்கும், மக்காத குப்பைகளை மக்கள் தரம் பிரிக்காமல் தருவதால் அவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படும்போது, மீத்தேன் வாயு உருவாகி தீ விபத்து ஏற்படுகிறது.
  இதைத் தடுக்கவும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளைக் குறைக்கவும், மாநகராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 உரம் தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 57 கூடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. 
  இதில் பணிகள் முடிவடைந்த 12 கூடங்கள் அடுத்த மாதம் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளன. மாநகரில் வீடு வீடாக மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெறுவதற்காக 102 சரக்கு வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. அதில், பச்சை நிற வாகனங்களில் வீட்டுச் சமையல் கழிவுகள், காய்கறி உள்ளிட்ட மக்கும் குப்பைகள் பெறப்படும். இந்த வாகனங்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் தினமும் குப்பைகள் சேகரிக்கப்படும்.
  நீல நிற வாகனங்கள் மூலம் பிளாஸ்டிக், கண்ணாடி உள்ளிட்ட மக்காத குப்பைகளை வாரத்தில் இருமுறை மட்டும் சேகரிக்கப்படும். சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள உரம் தயாரிக்கும் கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
  பொலிவுறு நகரம் (ஸ்மார்ட்சிட்டி) திட்டத்தின் கீழ் மாநகரில் ரூ.60 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த கட்டமாக ரூ.580 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. 
  வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்படும் சமயத்தில் தீயை உடனடியாக அணைக்க 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கப்பட உள்ளது. மாநகரில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்காத வீடு, நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
  மாநகரில் சாக்கடைக் கழிவுகளை சுத்தம் செய்ய 3 ரோபோக்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2 ரோபோக்கள் மத்திய அரசின் உதவியுடனும், ஒரு ரோபோ மாநகராட்சி நிதியிலும் வாங்கப்படுகிறது. 
  சிறுவாணி அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளதால், குடிநீர் விநியோகிக்கும் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விரைவில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
  பேட்டியின்போது, மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி உடனிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai