சுதந்திர தினம்: கோவையில் பாதுகாப்புப் பணியில் 1,700 போலீஸார்

சுதந்திர தினத்தையொட்டி கோவை மாநகரில் ஆயிரம் போலீஸாரும், ஊரகப் பகுதிகளில் 700 போலீஸாரும்

சுதந்திர தினத்தையொட்டி கோவை மாநகரில் ஆயிரம் போலீஸாரும், ஊரகப் பகுதிகளில் 700 போலீஸாரும் என மொத்தம் 1,700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் 72 ஆவது சுதந்திர தின விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சிர் த.ந.ஹரிஹரன், கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
பின்னர் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி விழா நடைபெறும் வஉசி மைதானம் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அப்பகுதியில் போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், வெடிகுண்டு நிபுணர்கள் கருவி மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
மாநகர் முழுவதும் 24 மணி நேரமும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகர் முழுவதும் இரவு ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஒரு வாரத்துக்கு மேலாக விடுதிகளில் தங்கியுள்ள வெளியூர் நபர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
வ.உ.சி. மைதானம், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டிக் கடைகளுக்கு அடுத்த இரு நாள்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஆயுதப் படை போலீஸார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மாநகர போலீஸார் என மொத்தம் ஆயிரம் பேரும், புறநகர் பகுதியில் 700 பேர் என மொத்தம் 1,700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவுப் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு ரயில் பெட்டிகள், ரயில் நிலையத்தில் உள்ள பார்சல்கள் சோதனையிடப்பட்டன. 
ரயில் நிலையத்தின் பிரதான மற்றும் பின்பக்க நுழைவாயிலில் பயணிகளின் உடைமைகள் பரிசோதனைக்கு பிறகே பயணிகள் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நடைமேடைகள், தண்டவாளப் பகுதிகளில் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com