ஜெம் மருத்துவமனையில் உடல்பருமன் அறுவை சிகிச்சை: ஒன்றரை ஆண்டில் 124 பேர் பயன்

கோவை, ஜெம் மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில்

கோவை, ஜெம் மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 124 பேருக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இது குறித்து மருத்துவமனையின் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் பி.பிரவீன்ராஜ் கூறியதாவது:
உடல் பருமனால் வயது வேறுபாடு இல்லாமல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பிரச்னையை நோயாகவே உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை, மூச்சுத் திணறல், இருதய நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு உடல்பருமன் வழிவகை செய்கிறது. 
உடல் எடை குறைப்புக்கு தவறான சிகிச்சை மேற்கொள்வதால் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், லாப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் பக்க விளைவுகள் இல்லாமல்  உடல் எடையைக் குறைக்க முடியும். முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள முடியும். 
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிகளை அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்க சுகாதாரத் துறை சார்பில் 5 அரசு மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். சொந்த செலவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ரூ.4 லட்சம் வரை செலவாகும். 
இந்தக் குழு அமைக்கப்பட்ட கடந்த 18 மாதங்களில் தமிழகத்தில் 133 பேருக்கு லாப்பிராஸ்கோப்பி மூலம் உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில், கோவை ஜெம் மருத்துவமனையில் மட்டும் 124 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின் உடல் எடை உடனடியாக குறையாது. இதற்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டுகள் வரை கால அவகாசம் எடுக்கும். சிகிச்சையின் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்படுவதால் உடல் எடை சீராக குறையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com