சுதந்திர தின விழா

மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 

மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில்...
மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 
விழாவில் சார்பு நீதிமன்ற நீதிபதி இந்துலதா, குற்றவியல் நீதித் துறை நடுவர் சரவணன் பாபு ஆகியோர் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். 
இந்நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞர் செந்தில்குமார், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கனகசுந்தரம், பொருளாளர் ரவிஆறுமுகம், இணைச் செயலாளர்கள் ஹபிபுர் ரகுமான், சிவகுமார், ஆனந்தகுமார், ராஜேந்திரன், செவ்விளம்பருதி, மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.வி. கல்லூரியில்...
காரமடை டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் வே.சுகுணா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் 73 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.  விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்  திருப்பதி  செய்திருந்தார்.  இந்நிகழ்வில் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கீரணத்தம் ஊராட்சியில்...
எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம், கீரணத்தம்  ஊராட்சியில்  கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடபதி முன்னிலை வகித்தார். ஊராட்சி  செயலர் பாலாஜி ஊராட்சியின் வரவு- செலவு, ஊராட்சியில் செய்யப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.  இந்தக் கூட்டத்தில்  சட்டப் பேரவை  உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
கீரணத்தம் ஊராட்சிக்கு  உள்பட்ட  பகுதிகளில்  உள்ள அரசுக்கு சொந்தமான நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்களை  தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஊராட்சியில் திறந்த வெளியில் குப்பை கொட்டப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

பெ.நா.பாளையத்தில்...
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் 73 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த தெற்குப்பாளையத்தில் உள்ள ஏவிபி மெட்ரிக். பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளியின் நிர்வாகத் துணைத் தலைவர் சாமியப்பன்  தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தாளாளர் எம். சண்முகம் முன்னிலை வகித்தார். 
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் சார்பில் மாருதி உடற்பயிற்சிக் கல்லூரியில் நடந்த விழாவில் வித்யாலயத்தில் உள்ள 15 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை வித்யாலய செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் ஏற்றுக் கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 
ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, முதன்மை செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தாளாளர் என்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார். 
வீரபாண்டியிலுள்ள புனித ஜான் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, முதல்வர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். தாளாளர் ஆர்.பி.அரவிந்தன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்பாக கலைநிகழ்ச்சிகளை நடத்திய மாணவ, மாணவியரைப் பாராட்டினார். 
ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் எஸ்.மகேந்திரன் தேசியக் கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com