யானை துரத்தியதில் வனக் காவலர் காயம்
By DIN | Published On : 18th August 2019 08:51 AM | Last Updated : 18th August 2019 08:51 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி வனச் சரகத்தில் பணி புரியும் வனக் காவலர் யானை துரத்தியதில் கீழே விழுந்து காயமடைந்தார்.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகம், கோபால்சாமி மலை பீட் பகுதி அருகே தனியார் விவசாயப் பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்துள்ளது. இதையடுத்து, வனக் காவலர் தங்கராஜ் உள்ளிட்ட குழுவினர் யானையை வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டனர். அப்போது ஒற்றை காட்டு யானை வனத் துறையினரைத் துரத்தியது.
வனத் துறையினர் தப்பி ஓடியபோது, வனக் காவலர் தங்கராஜ் பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். அவர் பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில நாள்களுக்கு முன்னர் சபரி என்ற வனக் காவலர் யானை துரத்தும்போது பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.