கோவை அருகே நகை வியாபாரிகளை தாக்கி ரூ.70 லட்சம் பணம் கொள்ளை: போலீஸார் விசாரணை

கோவை அருகே நகை வியாபாரிகளைத் தாக்கி ரூ.70 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை அருகே நகை வியாபாரிகளைத் தாக்கி ரூ.70 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள பட்டாம்பியில் தங்கியிருப்பவர் விட்டல் சேட் (36). வட மாநிலத்தைச் சேர்ந்த நகை வியாபாரியான இவர் பல ஆண்டுகளாக கேரளத்தில் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் தங்க நகைகளை கோவையில் உள்ள நகை கடைகளுக்குச் சென்று விற்பனை செய்து வருவது வழக்கம். இந்நிலையில் விட்டல் சேட்டும், அவரது நண்பர் பாலக்காட்டைச் சேர்ந்த அன்வர் (30) என்பவரும் கோவை டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கடைகளில் நகைகளைக் கொடுப்பதற்காக வியாழக்கிழமை இரவு வந்துள்ளனர். நகைகளை விற்பனை செய்த பின்னர் வசூலிக்கப்பட்ட ரூ.70 லட்சம் பணத்துடன் காரில் மீண்டும் கேரளம் திரும்பியுள்ளனர்.
 கோவையில் இருந்து இவர்களது காரை 4 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்துள்ளது. இதைப் பார்த்த விட்டல் சேட்டின் கார் ஓட்டுநர் காரை வேகமாக ஓட்டியுள்ளார். இருப்பினும் விடாத அந்தக் கும்பல் மதுக்கரை அருகே விட்டல் சேட்டின் காரை வழிமறித்து அவரை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் அவர் மயங்கியதையடுத்து அவரை சாலையோரம் வீசிவிட்டுச் சென்றனர். காரில் இருந்த அன்வரையும், ஓட்டுநரையும் தாக்கிய அந்த கும்பல் அவர்களைக் கட்டிப்போட்டு காரில் வைத்து கடத்திச் சென்றனர். 
 பின்னர் பாலக்காடு செல்லும் வழியில் உள்ள மூங்கில் மடை அருகே சென்றபோது அன்வர், கார் ஓட்டுநருடன் காரையும் சாலையோரம் நிறுத்திவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.70 லட்சத்துடன் தப்பிச் சென்றது. மயக்கம் தெளிந்த பின்னர் அன்வரும், கார் ஓட்டுநரும் அங்கிருந்து கே.ஜி.சாவடி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அவர்கள் சாலையோரம் மயங்கிய நிலையில் இருந்த விட்டல் சேட்டை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.  காருடன் கடத்திச் செல்லப்பட்ட அன்வர், கார் ஓட்டுநரையும் வாளையாறு போலீஸார் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி, வாளையாறு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com