பொருளாதார மந்தநிலையை மத்திய அரசு விரைவில் தீர்க்கும்: கொடிசியா தலைவர் நம்பிக்கை

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை பிரச்னைகளை மத்திய அரசு

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை பிரச்னைகளை மத்திய அரசு விரைவில் தீர்க்கும் என்று கொடிசியா தலைவர் ராமமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 பொருளாதார மந்தநிலை காரணமாக கோவை மண்டலத்தில் ஏற்பட்டு வரும் பிரச்னைகள் குறித்து பல்வேறு தொழில் அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவற்றை மத்திய அரசுக்கு அனுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக கொடிசியா சார்பில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சி.ஐ.ஐ., சீமா, கொசிமா, கோ இந்தியா, சிஸ்பா, காஸ்மோபேன் உள்ளிட்ட 11 அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது துறையில் நிலவும் பிரச்னைகள் குறித்து விளக்கினர்.
இதைத் தொடர்ந்து கொடிசியா தலைவர் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொருளாதார மந்த நிலை காரணமாக கோவை மண்டலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து கருத்துகளைக் கேட்டறியவும், அதை மத்திய அரசுக்கு அனுப்பி பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது தொழிலில் உள்ள சிக்கல்கள், மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியவை குறித்து பேசினர். நாடு முழுவதிலும் நிலவும் பொருளாதார மந்த நிலையால் கோவையிலும் பொருளாதார பிரச்னைகள், வேலைவாய்ப்பின்மை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது தொழில் துறை சார்ந்த சில பிரச்னைகள் குறித்து நேரில் தெரிவித்தேன். அப்போது அனைத்து பிரச்னைகளுக்கும் 2 வாரங்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். அந்த காலக்கெடு முடிவடைவதற்குள் பிரச்னைகளை மத்திய அரசு தீர்க்கும் என்று நம்புகிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் பேசும்போது, சிறு, குறு தொழில்கள், ஆட்டோமொபைல் தொழில்களில் தேக்கநிலை நிலவுவதாகவும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாகவும் தொழில் அமைப்புகளின் தரப்பில் இருந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் மத்திய அரசின் சில கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டும் போதும். நாங்கள் நிலைமையை சரி செய்துவிடுவோம் என்று தொழில் அமைப்பினர் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். 
 கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று ஒருவரும் கோரிக்கை விடுக்கவில்லை. அதேபோல், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதில் சுணக்கம் நிலவுவதாகவும், இதற்காக தனியாக கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். மேலும், வருங்கால வைப்பு நிதி செலுத்துவது, மின் கட்டணத்தை திரும்பப் பெறுவது, இறக்குமதி இயந்திரங்கள் மீதான வரியைக் குறைப்பது, ஜி.எஸ்.டி.யில் நிலவும் சிக்கல்கள் குறித்து தொழில் அமைப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவற்றை மத்திய நிதி அமைச்சரிடம் தெரிவித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com