வலுக்கிறது பொள்ளாச்சி தனி மாவட்ட கோரிக்கை

பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.

பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ளது பொள்ளாச்சி வருவாய் கோட்டம். கடந்த 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் சார்-ஆட்சியர் அலுவலகம் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்ப காலத்தில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய பொள்ளாச்சி வருவாய் கோட்டமாக செயல்பட்டு வந்தது. கடந்த 1983 ஆம் ஆண்டு மே மாதம் பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்த திருப்பூர் தனி வருவாய் கோட்டமாக பிரிக்கப்பட்டது. 
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தை தனி மாவட்டமாக உருவாக்கப்படவேண்டும் என்று கோரிக்கை 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட திருப்பூர், கடந்த 2008 ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பொள்ளாச்சி கோட்டம் தற்போது வரை மாவட்டமாக பிரிக்கப்படவில்லை. திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு போதிய பரப்பளவு, மக்கள்தொகை, தாலுகாக்களின் எண்ணிக்கை போன்றவை போதுமானதாக இல்லாமல் இருந்ததால், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த உடுமலை புதிய கோட்டமாக மாற்றப்பட்டு திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டதுதான் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்கள். தற்போது, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள் உள்ளன.
பொள்ளாச்சி கோட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 118 ஊராட்சிகள், இரு நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் உள்ளன. மக்களவைத் தொகுதியே பொள்ளாச்சி என்ற பெயரில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சியை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில் சேக்கல்முடி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்டத் தலைமை இடமான கோவை செல்ல 125 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது. வால்பாறை போன்ற மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோவைக்குச் செல்ல 5 மணி நேரம் ஆகிறது.
தங்களது குறைகள் அல்லது கோரிக்கைகளை தெரிவிக்க ஒரு நாள் முழுவதையும் செலவிட வேண்டியுள்ளது. இது போன்ற சூழலில் பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்ட உருவாக்கினால் வால்பாறை மக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.
இதுதவிர ஆனைமலை தாலுகாவில் வசிக்கும் மக்களும் கோவை சென்று வருவதில் 80 கி.மீ பயணிக்க வேண்டும். பொள்ளாச்சி தாலுக்கா மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல 45 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது. 
இதேபோல, உடுமலை வட்டத்தில் உள்ள திருமூர்த்தி பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட தலைமையிடமான திருப்பூர் செல்ல 80 கி.மீ. மேல் பயணிக்க வேண்டும். ஆனால், பொள்ளாச்சி வருவது என்றால் 35 முதல் 40 கி.மீ., பயணித்தால் போதுமானது.
உடுமலை வட்டத்தை திருப்பூருடன் இணைக்கும்போது, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி இருக்க விருப்பம் தெரிவித்தனர். எனவே, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 வட்டங்கள் இருக்கும். 
இந்த 6 வருவாய் வட்டங்களையும் இணைத்தால் பரப்பளவில் 2,771 சதுர கி.மீட்டர் பரப்பும், 12 லட்சத்து 63 ஆயிரம் மக்கள் தொகையுமாக, 219 கிராமங்களும் கணக்கில் வரும். ஒரு மாவட்டம் உருவாக 2,500 சதுர கி.மீட்டர் பரப்பும், 10 லட்சம் மக்கள் தொகையும், 200 கிராமங்களும் இருந்தால் போதுமானது ஆகும்.
வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளைச் சேர்ந்த மக்களின் குறைகளைப் போக்கவும், இந்த பகுதிகளில் உள்ள நிர்வாகரீதியான பிரச்னைகளை சரிசெய்யவும் பொள்ளாச்சி மாவட்டம் என்பது தற்போது உருவாக்கப்பட வேண்டியது அவசியம் ஆகிறது. 
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வலியுறுத்தியுள்ளார். இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகளும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com