பிரதமரின் பிறந்தநாள் குறும்படப் போட்டிக்கு செப்.10-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் சார்பில் நடத்தப்படும்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் சார்பில் நடத்தப்படும் குறும்படப் போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவர்கள் தங்களது படைப்புகளை வரும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
 இதுகுறித்து பாஜகவின் மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
 பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டி நடத்த உள்ளோம். பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் வாயிலாக சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் குறும்படங்களைத் தயாரித்து அனுப்ப வேண்டும். தமிழக அளவில் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.  திரைப்பட இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகையும் இயக்குநருமான மதுவந்தி அருண் ஆகியோர் நடுவர்களாக இடம்பெற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்வர்.
 ரூ.1.10 லட்சம் வரையிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் உள்ளிட்டவற்றுக்கும் தனித்தனியாக ரூ.5 ஆயிரம் வரை பரிசுத்தொகை வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
 ஒரு கல்லூரியில் இருந்து அதிகபட்சம் 15 குறும்படங்கள் போட்டிக்கு அனுமதிக்கப்படும். ஒரு குறும்பட அணியில் குறைந்தபட்சம் 3 மாணவர்கள் முதல் அதிகபட்சம் 20 மாணவர்கள் வரை இருக்கலாம். குறும்படத்தின் கால அளவு 2 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை இருக்கலாம். செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் கோவை நூறு அடி சாலையில் உள்ள மக்கள் சேவை மையத்தில் நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ குறும்படங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பரிசுக்குத் தேர்வாகும் படங்கள் மக்கள் சேவை மையத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் கடிதத்தை இணைக்க வேண்டும். பரிசளிப்பு விழா செப்டம்பர் 17ஆம் தேதி சிங்காநல்லூரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளி கலையரங்கில் நடைபெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com