புதிய குடியிருப்புகள் கட்டித் தரக் கோரி நரிக்குறவர் சமுதாயத்தினர் தர்னா

தங்களது இடிந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடு கட்டித்தர கோரிக்கை வைத்து நரிக்குறவர்கள் சமுதாயத்தினர்

தங்களது இடிந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடு கட்டித்தர கோரிக்கை வைத்து நரிக்குறவர்கள் சமுதாயத்தினர் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
 பொள்ளாச்சி வடக்கு பகுதியில் அமைந்துள்ளது குள்ளக்காபாளையம். இங்குள்ள ஜெ.ஜெ.நகரில் 15-க்கும் அதிகமான வீடுகளில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தும், அவ்வப்போது மேற்கூரையின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதாகவும், எனவே தங்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 இந்நிலையில், சூர்யா என்பவரின் வீட்டில் அவருடைய 1 வயது குழந்தை தனுஷ் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர்தப்பியது. 
 இதனால் அதிருப்தியடைந்த நரிக்குறவர் சமுதாய மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து நுழைவு வாயில் முன் தர்னாவில் ஈடுபட்டனர்.
 அப்போது சிறிது நேரம் மழை பெய்தது. இருப்பினும் மழையில் நனைந்துகொண்டே போராட்டத்தை தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை வட்டாட்சியர் ஜெயச்சித்ரா, வருவாய் ஆய்வாளர் பட்டுராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. 
 பின்னர் கோட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com