விலையில்லா வெள்ளாடுகளில் 75 சதவீதம் உயிரோடில்லை: விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் புகார்

கோவையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா வெள்ளாடுகள், கோழிக்குஞ்சுகள்

கோவையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா வெள்ளாடுகள், கோழிக்குஞ்சுகள் 75 சதவீதத்துக்கும் மேல் இறந்துவிட்டதாக விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், வேளாண் இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கே.ஜி.உமாராணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 
  பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி பேசியதாவது: 
 கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட விலையில்லா வெள்ளாடுகள், கறவைப் பசுக்கள், நாட்டுக் கோழிக்குஞ்சுகளில் 25 சதவீதம் மட்டுமே தற்போது உயிரோடு இருக்கின்றன. 75 சதவீதம் கால்நடைகள், கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்ட வெகு சில நாள்களிலேயே  இறந்துவிட்டன. ஆரோக்கியமில்லாத, நோய் பாதிக்கப்பட்ட வெள்ளாடுகள், கறவை பசுக்கள், கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டதே இதற்கு காரணம். ஆரோக்கியமற்ற கால்நடைகள் கொள்முதல் செய்தது மட்டுமின்றி, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா வெள்ளாடுகள், பசுக்கள், கோழிகளை கால்நடை பராமரிப்புத் துறை தொடர்ந்து கண்காணிக்க தவறியதும் முக்கிய காரணமாகும். இதனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இத்திட்டத்துக்கான பயனாளிகள் தேர்விலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பெரும்பாலான மானியத் திட்டங்களுக்கு குறிப்பிட்ட சிலரே பயனாளிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர். வருங்காலங்களில் ஆரோக்கியமான வெள்ளாடுகள், கறவைப் பசுக்கள், கோழிக்குஞ்சுகளை வழங்க வேண்டும் என்றார். 
 பயிர்க் காப்பீடு திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சு.பழனிசாமி அளித்துள்ள மனு:
 மத்திய அரசின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பயனடைந்துள்ளன. மத்திய அரசு அங்கீகரித்துள்ள 11 காப்பீட்டு நிறுவனங்களும் விவசாயிகளிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.47 லட்சத்து 40 ஆயிரத்து 798 கோடி பிரீமியமாக பெற்றுள்ளன. இதில் ரூ.31 லட்சத்து 61 ஆயிரத்து 272 கோடி மட்டுமே விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வருவாய் கிராமத்தில் குறிப்பிட்ட சதவீதம் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. இதனால் இத்திட்டம் பெரும்பாலானவர்களுக்கு பலன் அளிப்பதில்லை. இயற்கை பேரிடர், பூச்சி நோய் தாக்குதல் உள்பட எந்தவித காரணமாக இருந்தாலும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு வழங்குவதில் உள்ள முறைகேடுகள், குளறுபடிகளை களைந்து, விவசாயிகளுக்கு பலன்தரும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். 
 களப் பயிற்சி அளிக்க வேண்டும்: இயற்கை வேளாண்மை சாகுபடிகள் அதிகரித்து வரும் நிலையில் இயற்கை உரங்கள் உற்பத்தி, களைக்கொல்லிகள், பூச்சி விரட்டிகள் உற்பத்தி மற்றும் இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் பயிற்தி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து விவசாயிகளாலும் வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு வந்து பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் கிராமங்களுக்கே சென்று விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, கால்நடை மருந்தகங்கள் பற்றாக்குறை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com