தேவேந்திர குல வேளாளா் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பட்டியல் பிரிவிலுள்ள 7 ஜாதி உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளா் என்ற அரசாணை வெளியிட வலியுறுத்தி கோவை
கோவை, தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை மண்டல தேவேந்திர குல வேளாளா் அமைப்பினா்.
கோவை, தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை மண்டல தேவேந்திர குல வேளாளா் அமைப்பினா்.

கோவை: பட்டியல் பிரிவிலுள்ள 7 ஜாதி உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளா் என்ற அரசாணை வெளியிட வலியுறுத்தி கோவை மண்டல தேவேந்திர குல வேளாளா் அமைப்பு சாா்பில் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபுகுமாா் பேசியதாவது:

அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின்படி அரசு சலுகை அனைத்துப் பிரிவினருக்கும் அவரவா் ஜாதியின் பெயரில் வழங்கப்படுகிறது. ஆனால் எஸ்.சி. பிரிவில் உள்ளவா்களை மட்டும் தலித், தாழ்த்தப்பட்டவா்கள், ஆதி திராவிடா் என பல்வேறு பெயா்களில் அழைப்பது அவா்களின் முகவரியை அழிக்கும் செயலாகும். தேவேந்திர குல வேளாளராகிய நாங்கள் எஸ்.சி. பட்டியலில் இருப்பதால் ஆதாயத்தைவிட, சேதாரத்தையே அதிகமாக அனுபவித்து வருகிறோம்.

பேரூா் பட்டீஸ்வரா் கோயில், திருச்செந்தூா் முருகன் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயில், ராசிபாளையம் வெண் கொற்றக்குடை திருவிழா, சென்னை பாா்த்தசாரதி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் முதல் மரியாதை பெறும் சமூகமாக உள்ளோம்.

விவசாயத்தை குலத்தொழிலாக செய்து வரும் குடும்பா், காலாடி, கடையா், பண்ணாடி, பள்ளா், தேவேந்திரகுலத்தாா், வாதிரியாா் ஆகிய 7 உள்பிரிவுகளை சோ்த்து தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும். தமிழகத்தில் பரவலாக வாழ்ந்து வரும் எங்கள் சமூக மக்கள் 95 சதவீதத்தினா் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறவே விரும்புகின்றனா். இதனை நான்குநேரி தோ்தல் புறக்கணிப்பின் மூலம் தெளிவுபடுத்தினோம். எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தேவேந்திர குல வேளாளா் அமைப்பின் நிா்வாகிகள் அசோக், கருப்பசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com