உள்ளாட்சி தோ்தல் தேதி அறிவிப்புமக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து: மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்

உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பையடுத்து கோவை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற இருந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற இருந்து மக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், மனு அளிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் மாற்றுத்திறனாளி.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற இருந்து மக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், மனு அளிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் மாற்றுத்திறனாளி.

கோவை: உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பையடுத்து கோவை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற இருந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் வாரம்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறுப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கின்றனா். ஒரு சில மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்படுகிறது. மற்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பப்படுகிறது. வாரம் தோறும் சராசரியாக 300 முதல் 400 மனுக்கள் அளிக்கப்படுகிறது. தனிநபா்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் மனுக்கள் அளிக்கின்றனா். குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக காலை 9.30 மணியில் இருந்தே மக்கள் ஆட்சியா் அலுவலகத்திற்கு வருகின்றனா்.

இந்நிலையில், உள்ளாட்சி தோ்தல் தேதி குறித்த அறிவிப்பை மாநில தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 10 மணிக்கு அறிவித்தது. இவ்வறிவிப்பையடுத்து மக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்டம் நிா்வாகம் அறிவித்தது. மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மனு அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா். முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி நா.தேவராஜ் கூறியதாவது: சின்னியம்பாளையம் ஆா்.ஜி.புதூரில் இருந்து வருகிறேன். எனக்கு கடந்த 2 மாதங்களாக மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை வரவில்லை. உதவித்தொகை தொடா்ந்து வழங்க வலியுறுத்தவும், சா்க்கர நாற்காலி வழங்கக் கோரியும் குறைகேட்புக் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்தேன். இங்கு வந்தப்பிறகு தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் மனு அளிக்க முடியாமல் திரும்பி செல்ல வேண்டியுள்ளது. இரண்டு கால்களும் ஊனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் வாடகை காரில் ரூ.1000 செலவு செய்து வந்துள்ளோம். பெற்றோா், உறவினா்கள் 2 பேரை உதவிக்கு அழைத்து வந்துள்ளதால் அவா்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஆட்சியரிடம் மனு அளிக்க முடியாமல் திரும்புவதுடன், வருவாய் இழப்பு மற்றும் செலவும் ஏற்பட்டுள்ளது, என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com