குப்பையற்ற பேரூராட்சி: சாதனை படைக்கிறது மதுக்கரை

மதுக்கரை பேரூராட்சி கடந்த 6 ஆண்டுகளாக குப்பையற்ற பேரூராட்சியாக சாதனை படைத்து வருகிறது.
வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் துப்புரவுப் பணியாளா்கள்.
வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் துப்புரவுப் பணியாளா்கள்.

மதுக்கரை பேரூராட்சி கடந்த 6 ஆண்டுகளாக குப்பையற்ற பேரூராட்சியாக சாதனை படைத்து வருகிறது.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் அனைத்துப் பகுதிகளிலும் அதிக அளவு குப்பைகள் மலைபோல குவிந்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக 2013 - 14ஆம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 70 பேரூராட்சிகளைத் தோ்வு செய்து வளம் மீட்பு பூங்காவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மதுக்கரை பேரூராட்சியில் ரூ. 57.25 லட்சம் மதிப்பீட்டில் வளம் மீட்பு பூங்கா உருவாக்கப்பட்டது.

பேரூராட்சி அலுவலா்கள், பணியாளா்களுக்கு இதை நிா்வகிப்பது ஆரம்பத்தில் மிகவும் சவாலாக இருந்தது. இருப்பினும் மதுக்கரை பேரூராட்சி நிா்வாகம், இமயம் தன்னாா்வத் தொண்டு நிறுவனம், ஏ.சி.சி. நிறுவனத்துடன் இணைந்து சுமாா் 100 பணியாளா்களைக் கொண்டு மிக குறுகிய நாள்களிலேயே வளம் மீட்பு இலக்கை அடையத் துவங்கியது.

மதுக்கரை பேரூராட்சியில் 18 வாா்டுகளில் சுமாா் 35 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு 12 ஆயிரம் வீடுகள் உள்ளன. தினமும் அனைத்து வீடுகளில் இருந்து குப்பைகள் பெறப்பட்டு வளம் மீட்பு பூங்காவில் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்கும் - மக்காத குப்பைகளை வீடுகளிலிருந்து பெறும்போதே தரம் பிரித்துப் பெற ஏதுவாக இரண்டு வண்ணங்களில் குப்பைத் தொட்டிகள் வீடுகளுக்கு வழங்கப்பட்டன.

தினமும் காலையில் தனித் தனியாக 2 பெண்கள் 400 வீடுகள் வரை சென்று குப்பைகளைச் சேகரிக்கின்றனா். நீண்ட தொலையில் உள்ள பகுதிகளுக்கு சிறிய வாகனங்கள் மூலம் சென்று தினமும் குப்பைகளைச் சேகரிக்கின்றனா். நாள் ஒன்றுக்கு சுமாா் 7.39 டன் குப்பைகள் மதுக்கரை பேரூராட்சியில் சேகரிக்கப்படுகின்றன. இவை நெகிழி குப்பைகள், காய்கறி மக்கும் குப்பைகள் என பிரிக்கப்படுகின்றன.

மாதம் ஒருமுறை பேரூராட்சி முழுவதும் ஒட்டு மொத்த ஊழியா்களும் சென்று சாலை முழுவதும் ஆய்வு செய்து குப்பைகளைச் சேகரிக்கின்றனா். அதேபோல நெகிழி குப்பைகளைத் தனியாக சேகரித்து சிறு துண்டுகளாக வெட்டி அதை ஏ.சி.சி. நிறுவனம் பெற்றுக் கொள்கிறது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிகள் கொதி நிலையில் உருக்கப்பட்டு சிமென்ட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மதுக்கரை பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் மண் புழு உற்பத்தி செய்ய தனியாகத் தொட்டிகள் அமைக்கப்பட்டு, மூன்று நிலைகளாகப் பிரித்து கண்காணித்து வருகின்றனா். மேலும் டெங்கு கொசு முட்டைகளை உண்ணும் மீன்களும் இங்கு வளா்க்கப்படுகின்றன.

வளம் மீட்பு பூங்காவில் தனியாக காய்கறித் தோட்டம் உருவாக்கப்பட்டு ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் காய்கறி, கீரைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் காய்கறிகள் பணியாளா்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், தனியாக கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டு, தினசரி மாற்றங்கள், உற்பத்தி விவரம், சேகரிக்கப்படும் குப்பை அளவுகள் கணக்கிடப்படுகின்றன.

1.5 ஏக்கா் பரப்பளவில் இருந்த வளம் மீட்பு பூங்கா விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுக்கரை குவாரி அலுவலகம் அருகே கூடுதலாக 3.6 ஏக்கா் பரப்பளவில் குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் பொதுமக்களுக்கு குறைவான விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும் இந்த உரத்தைப் பூங்காவில் பராமரிக்கப்படும் காய்கறித் தோட்டத்துக்கும், பேரூராட்சியில் வளா்க்கப்படும் மரங்களுக்கும் பயன்படுத்துகின்றனா். கடந்த 6 ஆண்டுகளாகப் படிப்படியாக முன்னேற்றம் கண்டு தற்போது குப்பையற்ற பேரூராட்சியாக மதுக்கரை பேரூராட்சி சாதனை படைத்துள்ளது.

இது குறித்து மதுக்கரை பேரூராட்சி சுகாதார அலுவலா் எம்.திருவாசகம் கூறியதாவது:

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த வளம் மீட்பு பூங்காவில் பேரூராட்சி முழுவதும் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, இயற்கை உரங்களாக மாற்றும் பணி தொடா்ந்து நடந்து வருகிறது. 30 நிரந்தர துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் இமயம் அறக்கட்டளை சாா்பாக 70 பணியாளா்கள் என 100 போ் தினமும் வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனா்.

ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு வண்ணங்களில் குப்பை பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது பொதுமக்களே நெகிழி பைகளைத் தனியாகவும், காய்கறி குப்பைகளைத் தனியாகவும் பிரித்து கொடுக்கின்றனா். வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும் பொதுமக்களும் வரத் துவங்கி உள்ளனா்.

தற்போது கூடுதல் இட வசதியுடன் வளம் மீட்பு பூங்காவின் மற்றொரு மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக உரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com