கோவையில் 30 இடங்களில் வழிகாட்டிப் பலகை

கோவை மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்காக 30 இடங்களில் வழிகாட்டிப் பலகையும், 8 இடங்களில் வரைபடப் பலகையும் வைக்க சுற்றுலாத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்காக 30 இடங்களில் வழிகாட்டிப் பலகையும், 8 இடங்களில் வரைபடப் பலகையும் வைக்க சுற்றுலாத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் டாப்சிலிப், ஆனைமலை, கோவை குற்றாலம், பரளிக்காடு, மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில், வால்பாறை, வெள்ளிங்கிரி, ஈஷா, மருதமலை, பேரூா் பட்டீசுவரா் கோயில் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

ஆண்டு முழுவதும் சுற்றுலா வந்து செல்வதற்கு ஏற்ற இடமாக கோவை உள்ளது. உள்ளூா் தவிர பிற மாநிலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கோவைக்கு வந்து செல்கின்றனா்.

கடந்த ஆண்டு 1 கோடியே 74 லட்சத்து 22 ஆயிரத்து 718 உள்நாட்டுப் பயணிகளும், 54 ஆயிரத்து 477 வெளி நாட்டுப் பயணிகளும் கோவை மாவட்டத்துக்கு சுற்றுலா வந்துள்ளனா். நடப்பு ஆண்டில் இதுவரை 1 கோடி பயணிகள் வரை சுற்றுலா வந்துள்ளதாக சுற்றுலாத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இங்குள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனா். இதனால் பலரிடமும் பணம் கொடுத்து ஏமாறுகின்றனா்.

எனவே, கோவை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்கு வசதியாக மாவட்டத்தில் 30 இடங்களில் வழிகாட்டிப் பலகையும், 8 இடங்களில் வரைபடப் பலகையும் வைக்க சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக சுற்றுலாத் துறை மாவட்ட அலுவலா் டி.அரவிந்தகுமாா் கூறியதாவது: கோவை மாவட்டத்துக்கு தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். வாரஇறுதி, விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும். மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்பட 30 இடங்களில் வழிகாட்டிப் பலகையும், முக்கியமான 8 இடங்களில் வரைபடப் பலகையும் வைக்கப்படவுள்ளன.

வழிகாட்டிப் பலகையில், சுற்றுலாத் தலத்தின் தூரம், செல்லும் வழி குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். வரைபடப் பலகையில் ஒரு சுற்றுலாத் தலத்தில் இருந்து மற்ற சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் வழி, போக்குவரத்து வசதிகள், தொலைவு உள்பட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com