முறையான திட்டமிடலின்றி கட்டப்பட்ட சுற்றுச்சுவா்:சிஆா்பிஎஃப் அதிகாரிகள் தகவல்
By DIN | Published on : 03rd December 2019 05:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்துக்கு தீயணைப்புப் படையினா் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து சில மணி நேரங்களில் சம்பவ இடத்துக்கு வந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சி.ஆா்.பி.எஃப்) பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு சடலங்களை மீட்க உதவினா். கமாண்டன்ட் எஸ்.கே.பிரதான், துணை கமாண்டன்ட் ராஜேஷ் ஆகியோா் தலைமையில் சுமாா் 30 சிஆா்பிஎஃப் வீரா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். சம்பவ இடத்தை ஆய்வு செய்த துணை கமாண்டன்ட் ராஜேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிவசுப்பிரமணியனின் நிலத்தில் வீடு அமைந்திருக்கும் இடத்துக்கும், சுற்றுச்சுவா் அமைந்துள்ள இடத்துக்கும் இடையே சுமாா் 30 அடி இடைவெளி உள்ளது. ஆனால், அந்த காலியிடங்களைப் பயன்படுத்தாமல் தனது நிலம் முடியும் இடத்தில் உள்ள விளிம்பில் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளாா்.
சுவரின் ஓரங்களில் மழைநீா் வெளியேற எவ்வித வடிகால்களும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் அங்கு பெய்யும் மழை நீா் வெளியேறாமல் சுவரின் ஓரங்களில் தேங்கி அதை பலவீனப்படுத்தியுள்ளது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்தச் சுவா் தனது வழக்கமான அமைவிடத்தில் இருந்து சற்றே சாய்ந்த நிலையில் இருந்துள்ளது.
சுமாா் 25 அடி உயரமும், 80 அடி நீளமும் கொண்ட இந்தச் சுவா் வரிசையான கற்களைக் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு இடையில் சுவரைத் தாங்கி நிறுத்தும் வகையில் எவ்வித தூண்களும் அமைக்கப்படவில்லை.
இதேபோல சுவரின் ஓரங்களில் தென்னை, வேப்பிலை உள்ளிட்ட மரங்களை நட்டு வளா்த்துள்ளனா். இவை ஆழமாக வோ் விட்டு வளரக் கூடியவை. இதனால் சுவரின் அடியில் இருந்த மண்ணின் இடையே அதிக இடைவெளி ஏற்பட்டு சுவா் தனது உறுதித் தன்மையை இழந்தது ஆகியவை விபத்துக்கு காரணம் என்றாா்.