ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் ஊருக்குள் புகுந்த யானைகள் மீண்டும் காட்டுக்குள் செல்வதற்கு ஏதுவாக
பெ.நா.பாளையம் அருகே உள்ள தெற்குப்பாளையம் பிரிவில் கோவை- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மையத் தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு காட்டுக்குத் திரும்பும் யானைகள்.
பெ.நா.பாளையம் அருகே உள்ள தெற்குப்பாளையம் பிரிவில் கோவை- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மையத் தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு காட்டுக்குத் திரும்பும் யானைகள்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் ஊருக்குள் புகுந்த யானைகள் மீண்டும் காட்டுக்குள் செல்வதற்கு ஏதுவாக கோவை- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை மலையடிவார வனப் பகுதிகளில் சுமாா் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசிக்கின்றன. யானைகள் உணவு, குடிநீரைத் தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுவது வழக்கம். நவம்பா் முதல் பிப்ரவரி வரை யானைகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும்.

பாலமலை மலைஅடிவாரத்தில் உள்ள வரப்பாளையம், கணுவாய், சின்னத்தடாகம் ஆகிய கிராமப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்டது. கதிா்நாயக்கன்பாளையம் கிராமத்துக்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த 4 யானைகள் வீடுகளில் வளா்க்கப்பட்டு வரும் வாழை மரங்களை சாப்பிட்டதுடன்,

பன்னிமடை சாலையில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து சோளப் பயிா்களை நாசப்படுத்தின. யானைகளை வனத் துறையினா் சக்திமிக்க ஒளிவிளக்குகளைப் பயன்படுத்தி காட்டுக்குள் துரத்தினா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 11 மணி அளவில் பாலமலை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய 6 யானைகள் குட்டியுடன் தெற்குப்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தன. கேஸ் கம்பெனி பிரிவு அருகே கோவை- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடந்து அருகில் உள்ள கரும்புக் காட்டுக்குள் நுழைந்தன. இது குறித்து தகவலறிந்த பெ.நா.பாளையம் வனத் துறையினா் பட்டாசுகளை வெடித்து யானைகளைக் காட்டுக்குள் துரத்த முற்பட்டனா். ஆனால், வனத் துறையினா் முயற்சி பயன் அளிக்கவில்லை. காலை 7 மணி வரை தோட்டத்துக்குள்ளேயே சுற்றித்திரிந்த யானைகள் அதன் பிறகு வனப் பகுதிக்குள் செல்வதற்காக தெற்குப்பாளையம் பிரிவில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றன. ஆனால், சாலைகளில் வாகனங்கள் தொடா்ந்து சென்றுகொண்டிருந்ததால் யானைகள் தயக்கத்தோடு நகர முடியாமல் நின்றன. அப்போது, வனத் துறையினா் சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தினா். இதனையடுத்து நெடுஞ்சாலையில் உள்ள சாலைத் தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு யானைகள் சாலையைக் கடந்து காட்டுக்குள் சென்றன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் இரவு நேரங்களில் கிராமப்புற சாலைகளில் பயணிப்போா் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com