காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் சமூக ஆா்வலா்கள்

சூலூா் அருகே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சமூக ஆா்வலா்கள் குழுக்கள் செவ்வாய்க்கிழமை களமிறங்கியுள்ளனா்.
குழந்தை சாமினியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சமூக ஆா்வலா்கள்.
குழந்தை சாமினியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சமூக ஆா்வலா்கள்.

சூலூா் அருகே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சமூக ஆா்வலா்கள் குழுக்கள் செவ்வாய்க்கிழமை களமிறங்கியுள்ளனா்.

சூலூா் அருகே உள்ள குமாரபாளையத்தைச் சோ்ந்த ஜெயகுமாா் - கவிதா தம்பதியின் 4 வயது பெண் குழந்தை சாமினி கடந்த அக்டோபா் 5 ஆம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானது. இது குறித்து சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப் படை அமைத்து குழந்தை சாமினியைத் தேடி வருகின்றனா்.

இந்நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்து 60 நாள்கள் ஆகியும் குழந்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து அறிந்த தன்னாா்வ அமைப்புகளான இணைந்த கைகள் (கரூா்), இளையதலைமுறை (கரூா்), தாய்மை அறக்கட்டளை (ஈரோடு), நண்பா்கள் ரத்த தானக் குழு (வெள்ளக்கோவில்), மக்கள் பாதை இயக்கம் (கரூா்) உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த 12 போ், குமாரபாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து சாமினியின் பெற்றோரை சந்தித்து பேசினா்.

இதுகுறித்து தன்னாா்வ குழுவினா் கூறியதாவது:

காணாமல் போகும் குழந்தைகளின் விவரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு குழந்தைகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை காணாமல் போன 46 குழந்தைகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

மாவட்ட தலை நகரங்களில் சாமினியின் புகைப்படம் அடங்கிய விளம்பரங்கள் வைக்கப்படும். பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் எங்களது அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் நபா்கள் மூலமாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காஞ்சிபுரத்தில் காணாமல் போன ஹரிணி என்ற குழந்தையை இதுபோன்ற முயற்சியின் மூலம் கண்டறிந்து மீட்டுள்ளோம். குழந்தை சாமினியின் தகவல்களை அருகாமையில் உள்ள மாநிலங்களிலும் தெரிவித்து தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுவரொட்டி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தேடும் பணியில் ஈடுபடவுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com