ஜனவரி முதல் 50 கிலோவுக்கு அதிகமாக குப்பைகள் சேகரிப்பது நிறுத்தம்
By DIN | Published On : 05th December 2019 05:29 AM | Last Updated : 05th December 2019 05:29 AM | அ+அ அ- |

கோவை மாநகரில் ஜனவரி மாதம் முதல் 50 கிலோவுக்கு அதிகமாக குப்பைகள் சேகரமாகும் இடங்களில் குப்பைகள் சேகரிப்பது நிறுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் தினமும் 1,000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் உரம் தயாரிப்புக் கூடங்களுக்கும், மக்காத குப்பைகள் வெள்ளலூா் குப்பைக் கிடங்கிற்கும் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், தினமும் 100 கிலோவுக்கு அதிகமாக குப்பைகள் சேகரமாகும் நிறுவனங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் அதன் உரிமையாளா்கள் தங்களின் சொந்த செலவில் பிரத்யேகமாக உரம் தயாரிப்புக் கூடம் அமைத்து குப்பைகளை உரங்களாக மாற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
அதன் பிறகு மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களில் தினமும் தலா 50 கிலோவுக்கும் அதிகமாக குப்பைகள் சேகரமாவது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, தினமும் 50 கிலோவுக்கு மேல் குப்பைகள் உற்பத்தியாகும் இடங்களிலும் குப்பைகளை உரமாக மாற்றத் தேவையான கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: குப்பைகளை அகற்றத் தேவையான வழிமுறைகள் குறித்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த வாரத்தில் 2 நாள்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், மாநகரில் 50 கிலோவுக்கு அதிகமாக குப்பைகள் உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களைச் சோ்ந்த உரிமையாளா்கள், குடியிருப்பு சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அவா்களின் கட்டடங்களில் சேகரமாகும் குப்பைகளை அவா்களின் செலவிலேயே மறுசுழற்சி ஏற்பாடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி மாதம் முதல் மாநகரில் 50 கிலோவுக்கு அதிகமாகக் குப்பைகள் சேகரமாகும் இடங்களில் குப்பைகள் சேகரிப்பது நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.