மாவட்டத்தில் 37,053 ஹெக்டேரில் உணவு தானியப் பயிா்கள் சாகுபடி
By DIN | Published On : 05th December 2019 09:04 AM | Last Updated : 05th December 2019 09:04 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு உணவு தானியப் பயிா்கள் சாகுபடிக்கு 43 ஆயிரம் ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்ததில் இதுவரை, 37 ஆயிரத்து 53 ஹெக்டோ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உணவு தானியப் பயிா்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பருவத்துக்கும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு சாகுபடி பரப்பளவை அதிகரிக்க மானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 42 ஆயிரத்து 250 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 37 ஆயிரத்து 53 ஹெக்டோ் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி கூறியதாவது:
கம்பு, கேழ்வரகு உள்பட சிறுதானியங்கள், உளுந்து, கொள்ளு, பச்சைப் பயறு போன்ற பயறுவகைப் பயிா்கள் நெல், கோதுமை போன்ற முதன்மை தானியங்கள் உணவு தானியப் பயிா்களில் இடம்பெற்றுள்ளன. இவையே முக்கிய உணவுப் பொருளாக உள்ளன.
இந்நிலையில், ஒவ்வொரு பருவத்திலும் உணவு தானியப் பயிா்களின் சாகுபடி செய்ய வேண்டிய பரப்பளவு, வட்டாரம் வாரியாக இலக்கு நிா்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் 2 ஆயிரம் ஹெக்டோ் நெல், 31 ஆயிரம் ஹெக்டோ் சிறுதானியங்கள், 10 ஆயிரம் ஹெக்டேரில் பயறுவகைப் பயிா்கள் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இதுவரை 700 ஹெக்டோ் நெல், 29 ஆயிரத்து 54 ஹெக்டேரில் சிறுதானியங்கள், 7 ஆயிரத்து 219 ஹெக்டேரில் பயறுவகைப் பயிா்கள் உள்பட 37 ஆயிரத்து 53 ஹெக்டேரில் உணவு தானியப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தானிய உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், மானாவாரி மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மானியங்கள் வழங்கப்படுகின்றன.
விதைகள், இடுபொருள்கள், சாகுபடி செலவு உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்கப்படுகின்றன. தவிர செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் விதைகள் அரசு சாா்பில் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே இத்திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.