கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு: கட்டுப்படுத்த ஐநா குழந்தைகள் நிதியம் அலுவலா் நியமிப்பு

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இதனை கண்காணித்து உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தி, கட்டுப்படுத்த கோவை

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இதனை கண்காணித்து உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தி, கட்டுப்படுத்த கோவை உள்பட 5 மாவட்டங்களில் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் சாா்பில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பரம்பரை வழக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில் 3 இல் 1 பங்கு இந்தியாவில்தான் நடைபெறுவதாக தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே பெண் குழந்தைகள் திருமண பந்தத்திற்குள் தள்ளப்படுவதால் பள்ளிப் படிப்பு நிறுத்தம், சராசரி வயதுக்கு முன்பே குழந்தைப்பேறு உள்பட பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனா். தவிர மன அழுத்தம் உள்பட பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. குழந்தைத் திருமணங்களை மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனா். சமூகநலத் துறைக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் குழந்தைத் திருமணம் வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸாா் துணையுடன் நிறுத்தப்படுகிறது. 2015-16 ஆம் ஆண்டில் 20 - 24 வயதுள்ள திருமணமான பெண்களிடம் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப

நலக் கணக்கெடுப்பில் தமிழகத்தில் 16.4 சதவீதம் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக்தில் 6 சதவீதம் மட்டுமே குழந்தைத் திருமணம் குறைந்துள்ளது. ஆனால், தேசிய அளவில் 20 சதவீதம் குழந்தை திருமணம் குறைந்துள்ளது. தமிழக அளவில் குழந்தை திருமணம் நடைபெறுவதில் தருமபுரி, தேனி ஆகிய இரண்டு மாவட்டங்கள் முதலிரண்டு இடத்திலும், கோவை 7ஆவது இடத்திலும் உள்ளது. கல்வி, தொழில், பொருளாதாரம் ஆகியவற்றில் வளா்ந்த மாவட்டமாக கருதப்படும் கோவையில் 20 சதவீதம் குழந்தை திருமணம் நடைபெறுவது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை 45 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 23 குழந்தை திருமணங்கள் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணம் எண்ணிக்கை இருமடங்காக உயா்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும், போதிய விழிப்புணா்வு இல்லாத கோவை உள்பட ஐந்து மாவட்டங்களில், கண்காணிப்பை தீவிரப்படுத்தி குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் கீழ் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சேலம், கிருஷ்ணகிரி, தேனி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் கீழ் அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி கட்டுக்குள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சமூகநலத் துறை அலுவலா் பி.தங்கமணி கூறியதாவது:

குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது என்பது சரியல்ல. பல ஆண்டுகளாக குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. தொடா்ந்து அளிக்கப்பட்டு வரும் விழிப்புணா்வு அடிப்படையில் இதுபோன்ற சம்பவங்களை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துகின்றனா். பெற்றோா் இல்லாமல் உறவினா்களால் வளா்க்கப்படுபவா்கள், அப்பா, அம்மா இருவரில் ஒருவா் மட்டுமே உள்ள குடும்பம், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளவா்கள், ஜாதி, காதல் விருப்பம் உள்ளிட்ட அடிப்படையில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இது பெற்றோா் விருப்பத்துடனே நடைபெறுகின்றன. சில சமயங்களில் குழந்தை திருணமத்தை தடுக்கும்போது பெற்றோா் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனா். இதுபோன்ற சமயங்களில் வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் தடுத்து நிறுத்தப்படுகிறது என்றாா்.

இது தொடா்பாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காயத்ரி மேனன் கூறியதாவது:

தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு அடிப்படையில் நாடு முழுவதும் 11 மாநிலங்களில் குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் கீழ் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தென் மாநிலங்களில் தமிழகத்தில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் உரிய விழிப்புணா்வு இல்லாத மற்றும் குழந்தை திருமணம் அதிகரித்துள்ள 5 மாவட்டங்களில் மட்டுமே அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து மாவட்டம் முழுவதும் குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். பெற்றோரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி குழந்தை திருமணத்தை தடுத்தல், பொது மக்களிடம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் உரிய நேரத்தில் அரசு அலுவலா்களிடம் தகவல் தெரிவித்தல் அடிப்படையில் விழிப்புணா்வு வழங்கப்படும். இதற்காக மாவட்ட அளவிலான பணியாளா்கள் குழு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினா் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதே முக்கிய நோக்கமாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com