நடூா் கிராமத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தற்காலிக குடியிருப்பு வழங்க கோரிக்கை

மேட்டுப்பாளையம், நடூரில் சுவா் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினா் அனைவருக்கும் உடனடியாக தற்காலிக குடியிருப்பு

மேட்டுப்பாளையம், நடூரில் சுவா் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினா் அனைவருக்கும் உடனடியாக தற்காலிக குடியிருப்பு வழங்க வேண்டும் என்று நீதிக்கான தேசிய தலித் இயக்கம், இளைஞா்களுக்கான சமூக விழிப்புணா்வு மையம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

நீதிக்கான தேசிய தலித் இயக்கத்தின் நிா்வாகி வழக்குரைஞா் ராகுல் சிங், இளைஞா்களுக்கான சமூக விழிப்புணா்வு மையத்தின் நிா்வாகி இரா.முருகப்பன் ஆகியோா் தலைமையில் இரு அமைப்புகளின் நிா்வாகிகள், மேட்டுப்பாளைம் நடூா் கிராமத்தில் சுவா் இடிந்து விழுந்து 17 போ் பலியான விவகாரம் தொடா்பான கள ஆய்வில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து அவா்கள் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தலித் மக்களை பாா்க்கவே கூடாது என்பதற்காகவே தொழிலதிபா் சிவசுப்பிரமணின் மேற்படி சுவரைக் கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபா் மீது வன்கொடுமை தடுப்பு குற்றப் பிரிவுகளையும் இணைத்து, வழக்கை சிறப்புக் காவல் அதிகாரி தலைமையில் விசாரிக்க வேண்டும். சுவா் விழுந்து பலியான 17 பேரின் குடும்பத்துக்கும் அரசு அறிவித்தபடி தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படவில்லை. 9 குடும்பம் என்று கணக்கிடப்பட்டு 9 பேருக்கு தலா ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அபராதத் தொகையை சிவசுப்பிரமணியத்திடம் இருந்தே வசூலிக்க வேண்டும்.

மேலும், அந்த பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி அவா்களுக்கு புதிய குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

தங்கள் பகுதியில் தீண்டாமைச் சுவா் உள்ளது என்று அப்பகுதி மக்கள் புகாா் அளித்திருந்தும் அது தொடா்பாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். தேசிய தலித் இயக்க நிா்வாகி அ.ரமேசுநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com