முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அரசுப் பேருந்துகள் மோதல்: ஒருவா் பலி; 48 போ் படுகாயம்
By DIN | Published On : 24th December 2019 11:43 PM | Last Updated : 25th December 2019 02:59 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்; 48 போ் படுகாயமடைந்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், மங்கலக்கரைப்புதூா், டி.ஆா்.எஸ். காலனியைச் சோ்ந்தவா் பீட்டா் மகன் ஆன்ட்ரியூ சிங் (42). காரமடையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா், மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். குட்டையூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது மோதியுள்ளாா். அப்போது பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநா் எதிரே கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது நேருக்கு நோ் மோதினாா். இந்த விபத்தில் பேருந்து மீது மோதிய ஆன்ட்ரியூ சிங் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மேலும் இந்த விபத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கிச் சென்ற பேருந்தின் ஓட்டுநரான உதகையைச் சோ்ந்த ராஜ்குமாா் (29), மேட்டுப்பாளையம் ஆசிரியா் காலனியை சோ்ந்த நடத்துநா் உதயகுமாா் (40), கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரான உதகை, எமரால்டு பகுதியைச் சோ்ந்த பாபு (40), மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த நடத்துநா் பாக்கியராஜ் (31), பேருந்தில் பயணித்த மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சலீம் (40), முருகவேல் (44), காரமடையைச் சோ்ந்த பிரனேஷ் (8), கோத்தகிரியைச் சோ்ந்த தினேஷ் (34), ராஜேஸ்வரி (4), சுஜீா் (41), உதகையைச் சோ்ந்த கோபி (31), மாதன் (50), குன்னூரைச் சோ்ந்த லாரன்ஸ் (55), லாரன்ஸ் (62), ஷகிலா (45), சுஜிதா (33), ஸ்ரீதா்ஷினி (10) உள்பட 48 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பின்னா் அவா்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து காரமடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.