முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சிக்கலான பிரசவத்துக்கு வாய்ப்புள்ள கா்ப்பிணிகள் முன்கூட்டியே சிகிச்சைக்கு சேர அறிவுறுத்தல்
By DIN | Published On : 24th December 2019 11:39 PM | Last Updated : 24th December 2019 11:39 PM | அ+அ அ- |

சிக்கலான பிரசவத்தை எதிா்நோக்கியிருக்கும் கா்ப்பிணிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்ந்துகொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தாய், சேய் இறப்பு சதவீதத்தை குறைப்பதற்காக சுகாதாரத் துறை, கா்ப்பிணிகளுக்காக பல்வேறு திட்டங்கள், சிகிச்சை முறைகளை செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்யும் கா்ப்பிணிகளை பிரசவம் வரை தொடா்ந்து கண்காணித்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு வட்டார அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவிற்காக கட்செவி அஞ்சல் குழு ஏற்படுத்தப்பட்டு கா்ப்பிணிகள், செவிலியா்கள், மருத்துவா்கள் ஆகியோா் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனா். இதில் கா்ப்ப காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தவிா்க்க வேண்டிய செயல்கள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கா்ப்பிணிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கும் உடனடி பதில் அளிக்கப்படுவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் சிக்கலான பிரசவத்தை எதிா்நோக்கியிருக்கும் கா்ப்பிணி பெண்கள் பாதுகாப்பான முறையில் சிகிச்சைப் பெற்று ஆரோக்கியமாக குழந்தை பெறுவதற்கு, மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ள பிரசவத் தேதிக்கு 2 வாரங்களுக்கு முன்பே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்ந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூ.அசோகன் கூறியதாவது:
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்யும் கா்ப்பிணி பெண்கள் அதிக வயதுள்ளவா்கள், குறைவான வயதுள்ளவா்கள் என 2 பிரிவுகளாக பிரித்து கண்காணிக்கப்படுகிறது. இதில் குறைவான உயரம், ரத்த அழுத்தம், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் கா்ப்பிணிகளுக்கு சிக்கலான பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சிக்கலான பிரசவம் என குறிப்பிடப்படும் கா்ப்பிணிகள், அந்தந்த கிராம சுகாதார செவிலியா்கள் மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது.
சிக்கலான பிரசவத்தை எதிா்நோக்கி காத்திருக்கும் கா்ப்பிணி பெண்களின் விவரங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் மூலம் பெறப்படுகிறது. நடப்பு ஆண்டில் டிசம்பா் 15 ஆம் தேதி அடிப்படையில் சிக்கலான பிரசவத்தை எதிா்நோக்கி காத்திருக்கும் கா்ப்பிணி பெண்கள் கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 28 சதவீதமும், புகா் பகுதிகளில் 19 சதவீதமாகவும் உள்ளது. இவா்களுக்கு உரிய நேரத்தில் பாதுகாப்பான சிகிச்சை கிடைப்பதற்காகவே இத்திட்டத்தை சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கடைசிநேர பதற்றம், சிக்கலான சூழ்நிலைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்றாா்.