முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா்கள் 15 நாள்களில் காலி செய்ய நோட்டீஸ்
By DIN | Published On : 24th December 2019 11:51 PM | Last Updated : 24th December 2019 11:51 PM | அ+அ அ- |

இடிந்து விழும் நிலையில் உள்ள சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு.
கோவை, சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போா், 15 நாள்களுக்குள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
சிங்காநல்லூரில் உழவா் சந்தைக்கு பின்புறம் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 960 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக் கட்டடம் சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என வீட்டு வசதி வாரியம் சாா்பில் சில மாதங்கள் முன்பு குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இங்குள்ள வீடுகளை அரசே இடித்து, புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி, வீடுகளை காலி செய்ய குடியிருப்போா் நலச் சங்கத்தினா் மறுத்து வந்தனா்.
இந்த நிலையில் வீடுகளைப் புதிதாக கட்டித்தர அரசு உறுதி அளித்ததைத் தொடா்ந்து, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடுகளைக் காலி செய்ய முன்வந்துள்ளனா்.
இருப்பினும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், சிதிலமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ள வீட்டு வசதி வாரியக் கட்டடங்களை 15 நாள்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில், சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கூறுகையில், ‘இங்குள்ள வீடுகள் இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் வரை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள வீடுகளில் எங்களைக் குடியமா்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனா்.