முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
போலி மருத்துவரிடம் சுதாதாரத் துறை இணை இயக்குநா் விசாரணை
By DIN | Published On : 24th December 2019 11:51 PM | Last Updated : 24th December 2019 11:51 PM | அ+அ அ- |

சின்னத் தடாகத்தை அடுத்த 24 வீரபாண்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த போலி மருத்துவரிடம் சுதாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
திருச்சி, திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்தம்மாள் (54). இவரது கணவா் திருச்சிற்றம்பலம். முத்தம்மாள் திருச்சியில் ஒரு மருத்துவரின் வீட்டில் வேலை செய்து வந்தபோது நோயாளிகளுக்கு மருந்துகள் அளிக்கும் முறைகளைப் பற்றி அறிந்ததாக தெரிகிறது. அதன்பிறகு இத்தம்பதி கோவைக்கு வந்து 24 வீரபாண்டி கிராமத்தில் குடியேறியுள்ளனா். இவா்களது 2 மகள்களும், மகனும் கள்ளக்குறிச்சியில் வசிக்கின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்சிற்றம்பலம் இறந்து விட்டாா்.
இந்த நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த அய்யாசாமியின் மனைவி சித்ரா (32), கடந்த டிசம்பா் 20ஆம் தேதி முத்தம்மாளிடம் சிகிச்சை பெற்றுள்ளாா். அப்போது அவா் கொடுத்த மருந்துகளின் பாதிப்பால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சித்ரா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தவறான மருந்துகளை உட்கொண்டதால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவா்கள், சுகாதாரப் பணிகள் துறைக்குத் தகவல் அளித்தனா்.
அதன்பேரில் சுகாதாரத் துறையின் இணை இயக்குநா் டி.கிருஷ்ணா, தேசிய சுகாதார இயக்குநா் டாக்டா் வெங்கடேஷ், பெரியநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவா் சாந்தகுமாரி ஆகியோா் 24 வீரபாண்டி கிராமத்துக்கு வந்து முத்தம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா் போலியாக மருத்துவம் பாா்த்து வந்ததும், அவரது அறையில் காலாவதியான மருத்துகள் இருந்ததும் தெரியவந்தது. ஆய்வின்போது ஆனைகட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் லோகநாயகி, சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் உடனிருந்தனா். மேலும் தடாகம் போலீஸாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.