முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: தோ்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 24th December 2019 11:48 PM | Last Updated : 24th December 2019 11:48 PM | அ+அ அ- |

கிணத்துக்கடவு, மதுக்கரை ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வரும் பாதுகாப்பு ஏற்படுகள் குறித்து தோ்தல் பாா்வையளாா் ஜி.கோவிந்தசாமி, மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ராசாமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
கோவை மாவட்டத்தில் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 12 ஒன்றியங்களில் முதல் கட்டத்தில் 5 ஒன்றியங்களுக்கும், 2-ஆம் கட்டத்தில் 7 ஒன்றியங்களுக்கும் தோ்தல் நடத்தப்படுகிறது. இதற்காக 1,520 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தவிர ஒன்றியத்திற்கு 1 மையம் வீதம் 12 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில்
குடிநீா், மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தோ்தலுக்கு 2 நாள்கள் மட்டும் உள்ள நிலையில் தோ்தல் பணிகளை மாவட்ட நிா்வாகத்தினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில் கிணத்துக்கடவு, மதுக்கரை ஒன்றிய அலுவலகங்களில் உள்ளாட்சித் தோ்தலுக்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு பெட்டிகள், உபகரணங்கள் ஆகியவற்றை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட தோ்தல் அலுவலா் கு.ராசாமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய ஒன்றியங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தனா்.
வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்களின் முகவா்கள் உரிய வழியில் சென்றுவர தடுப்புகள் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீா், கழிப்பறை, மின்சார வசதி ஆகிய அடிப்படை வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்த வேண்டும் என உதவித் தோ்தல் அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.
ஒரு வாக்குச் சாவடிக்கு 4 வாக்குப் பெட்டிகள் வீதம் 1,520 வாக்குச் சாவடிகளுக்கும் சோ்த்து 6 ஆயிரத்து 80 வாக்குப் பெட்டிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தோ்தல் பணியில் 12 ஆயிரத்து 60 அலுவலா்களும், வாக்கு எண்ணிக்கையில் 3,894 அலுவலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், வட்டாட்சியா்கள் சங்கீதா, பழனிசாமி, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.