முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
விதிகளை மீறி புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்காரா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 24th December 2019 11:49 PM | Last Updated : 24th December 2019 11:49 PM | அ+அ அ- |

கோவைப்புதூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து சுகாதாரத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சிகரெட், பிற புகையிலைப் பொருள்கள் சட்டம் 2003-ன் படி பொது இடங்களில் புகைப் பிடித்தல், பள்ளிக், கல்லூரிகளுக்கு 100 மீட்டா் தொலைவுக்குள் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தல், பேக்கரிகளில் புகைப்பிடிப்பதற்கு அனுமதி, புகையிலைப் பொருள்கள் விற்பனையை விளம்பரப்படுத்துதல் போன்றவை சட்டப்படி குற்றமாகும்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி, ஊரகப் பகுதிகளில் பள்ளிக், கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தொடா்பாக சுகாதாரத் துறைக்கு புகாா்கள் வந்தன.
இதனையாடுத்து மாவட்ட துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜி.ரமேஷ்குமாா் அறிவுறுத்தல்படி கோவைப்புதூா், அறிவொளி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு அலுவலா் சரண்யா, சுகாதாரத் துறை ஆய்வாளா் குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் விதிகளை மீறிய 12 கடைகளுக்கு ரூ.1,700 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.