Enable Javscript for better performance
உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக மிரட்டும் வட்டாட்சியர்கள்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள- Dinamani

சுடச்சுட

    

    உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக மிரட்டும் வட்டாட்சியர்கள்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

    By DIN  |   Published on : 01st February 2019 06:54 AM  |   அ+அ அ-   |    |  

    கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க வட்டாட்சியர்கள் மிரட்டல் விடுப்பதாக குறை கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
    கோவை மாவட்ட விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் பானுமதி, பல்வேறு துறைகளின் அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், கோவை மண்டலத்தில் விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
     அரசூர் - புகளூர், புகளூர் - இடையர்பாளையம், உடுமலை - இடையர்பாளையம் ஆகிய திட்டங்கள் கோவை மாவட்டம் வழியாகச் செல்கின்றன. கேரளம், சென்னை ஆகிய இடங்களிலும், மதுரையில் இருந்து இலங்கைக்கும் கேபிள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அதேபோல், கொச்சி, குஜராத்தில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு கடலுக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
     பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் மத்திய அரசு, தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டத்தை தரைக்கு அடியில் கேபிள் மூலம் செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட நிலத்தின் விவசாயி 48 மணி நேரத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போலீஸாரை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு பணியைச் செய்வோம் என்றும் வட்டாட்சியர்கள் மிரட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதுபோன்று மிரட்டும் வட்டாட்சியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குறு, சிறு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி பேசும்போது, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தில், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியங்களில் விடுபட்டுள்ள அனைத்து கிராமங்களையும் இணைக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே திட்டமிட்டபடியே திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார்.
    தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் டி.வேணுகோபால் பேசும்போது, அன்னூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதால் கரியாம்பாளையம் பிரிவு முதல் மேட்டுப்பாளையம் வரை அன்னூர் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால் நெரிசல் பிரச்னை ஏற்கெனவே உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்துவதன் மூலம் சரி செய்ய முடியும். விளைநிலங்கள் வழியாக புறவழிச் சாலை அமைப்பதற்கு 95 சதவீத விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றார்.
     முன்னதாக கால்நடைத் துறை அதிகாரிகள் பேசும்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் நடக்க முடியாத அளவுக்கு காயமடைந்த கால்நடைகள் குறித்து விவசாயிகள் தகவல் தெரிவித்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த கால்நடையை மருத்துவமனைக்கு கொண்டு வந்து உரிய சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற கருவிகள் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு கால்நடை தலைமை மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளன என்றனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp