குப்பைகளைக் கையாள 900 பேட்டரி வாகனங்கள் வாங்க மாநகராட்சி முடிவு
By DIN | Published On : 06th February 2019 06:34 AM | Last Updated : 06th February 2019 06:34 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி சார்பில் பூங்கா மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்களில் உரம் தயாரிக்கும் பணிக்காக குப்பைகளைச் சேகரிக்க பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட நூறு வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்குச் கொண்டு செல்லப்பட்டு மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வந்தது. வெள்ளலூர் குப்பைக் கிடங்களில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பிரச்னை ஏற்பட்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதையடுத்து, வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்படும் குப்பைகளின் அளவை குறைப்பதற்காக மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக குப்பைகளை கையாள்வது தொடர்பாக குப்பை மேலாண்மைத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, வார்டு வாரியாக உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பொது ஒதுக்கீட்டு நிலம் மற்றும் பூங்காக்களில் குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது.
இதற்கு முன்னோட்டமாக கோவை பாரதி பூங்காவில் சோதனை முறையில் குப்பைகளைத் தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொண்டு வந்து தரம் பிரித்து உரம் தயாரிப்பதற்காக மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களில் 69 குப்பை மேலாண்மை மையங்களும், பொது இடங்களில் சேகரிக்கப்படும் மரம், செடி போன்ற கழிவுகளை கையாள்வதற்காக பூங்கா உள்ளிட்ட இடங்களில் 271 இடங்களில் குப்பை மேலாண்மை மையங்களும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, பொது ஒதுக்கீட்டு இடங்களில் 10 குப்பை மேலாண்மை மையம் அமைக்கும் பணி பிப்ரவரி இறுதிக்குள் முடிவடைய உள்ளது. எனவே, ஒவ்வொரு வார்டுகளில் இருந்தும் குப்பைகளை சேகரிக்க ரூ. 14.33 கோடி மதிப்பில் 796 பேட்டரி வாகனங்களும், ரூ. 5.71 கோடி மதிப்பில் 102 இலகு ரக பேட்டரி வாகனங்களும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வார்டிலும் படிப்படியாக குப்பைத் தொட்டிகளைக் குறைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...