கோவை அருகே 375 ஏக்கரில் 2 கொடிசியா தொழில் பூங்காக்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கிவைக்கிறார்
By DIN | Published On : 06th February 2019 06:33 AM | Last Updated : 06th February 2019 06:33 AM | அ+அ அ- |

கொடிசியா சார்பில் கோவை அருகே சுமார் 375 ஏக்கர் பரப்பளவில் இரண்டு தொழில் பூங்காக்கள் அமைய உள்ளன.
கொடிசியா எனப்படும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் 1969ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 6,622 தொழில்முனைவோர் உறுப்பினர்களாக உள்ளனர். கொடிசியா அமைப்பின் சார்பில் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருக்கக் கூடிய இன்டஸ்ட்ரியல் கிளஸ்டர் என்ற முறையில் கோவை மாவட்டம், கள்ளப்பாளையம், மோப்பிரிபாளையம் பகுதியில் கொடிசியாவின் தொழில் பூங்காக்கள் அமைய உள்ளன. இவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை நடைபெறும் விழாவில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.
கள்ளப்பாளையத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள தொழில் பூங்காவில் தொழிற்சாலைகளுக்கு 120 மனையிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மோப்பிரிபாளையத்தில் 235 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள தொழில் பூங்காவில் 202 மனையிடங்கள் அமைய உள்ளன. இந்த இரு தொழில் பூங்காக்களிலும் 322 சிறு தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழில்கூடங்களை அமைக்கின்றன. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...